பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/595

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

580

நாடக மேடை நினைவுகள்


இதை மொழிபெயர்க்கும்படியாகக் கேட்டும், நான் அவ்வாறு செய்யாது விட்டேன். இந் நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, பிறகு ஒரு முறையோ இரண்டு முறையோதான் எங்கள் சபையில் ஆடப்பட்டது.

மற்றொரு நாடகம், “பிரதாப ருத்ரீயம்” என்னும் தெலுங்கு நாடகம். இதில் எனது ஆருயிர் நண்பர் ரங்கவடிவேலு நடனமாடும் மாதாக ஆடினார். நான் இந்நாடகத்தில் ஒரு மகம்மதிய சிப்பாயாகவும், பிறகு, டில்லி சுல்தான் மந்திரிகளில் ஒருவனாகவும் நடித்தேன். இந்தப் பிரதாபருத்ரீயம் என்னும் நாடகம் பிறகு பன்முறை எங்கள் சபையோரால் நடிக்கப்பட்டது; அப்படி நடிக்கப்படும் போதெல்லாம், நான் மேற்சொன்ன இரண்டு வேடங்களையும் தரித்திருக்கிறேன். முக்கியமான வேஷங்களைத் தரிப்பதில் எனக்கு ஒருவிதமான சந்தோஷமிருக்க, இப்படிப்பட்ட சில்லரை வேடங்கள் தரிப்பதிலும் மற்றொரு விதமான சந்தோஷமுண்டு. இந்நாடகத்தில், ச. ராகவாச் சாரியார், மந்திரி யௌகந்தரராக நடித்தது மிகவும் மெச்சத் தக்கதென்று முன்பே குறித்திருக்கிறேன். ஆயினும் இவரைவிடச் சபையோரின் மனத்தையெல்லாம் கவர்ந்தவர் இதில் வண்ணானாக நடித்த பி.வி. ராமானுஜம் செட்டியாரே. இந்த வண்ணான் வேடம் நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான வேஷமாம். இந்த வேஷத்தில் செட்டியார் தத்ரூபமாய் நடித்து ஆந்திர தேசத்தாரும் புகழும்படிப் பெயர் பெற்றிருக்கிறார். செட்டியார் அவர்கள், தெலுங்கு நாடகங்களில் ஹாஸ்ய பாகங்களை ஆடுவதில், தமிழில் எப்படி எம். துரைசாமி ஐயங்கார் பெயர் பெற்றிருந்தனரோ, அப்படியே பெயர் பெற்றிருக்கிறார்.

இவ்வருஷம் கோடைக்கால விடுமுறையில் எங்கள் சபை திருநெல்வேலி, திருவனந்தபுரம் என்னும் இரண்டு ஊர்களுக்குப் போய் நாடகங்கள் ஆடித் திரும்பி வந்தது. சென்னையை விட்டு மே மாதம் 29ஆம் தேதி புறப்பட்டு, திருநெல்வேலியில் ஆறு நாடகங்களை நடத்தி, பிறகு திருவனந்தபுரம் போய் அங்கு 10 நாடகங்கள் ஆடிப் பிறகு ஜுன் மாதம் 8ஆம் தேதி திரும்பி வந்தோம். இதுதான் எனதாருயிர் நண்பர் கடைசி முறை வெளியூர் என்னுடன்