பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/599

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

584

நாடக மேடை நினைவுகள்


சாமான்களையெல்லாம் இறக்கி, மற்றவர்களை யெல்லாம் வழியனுப்பி விட்டு, தான் உடனே சென்னைக்கு வந்து அன்றிரவு என்னைக் கண்டார். கண்டதும் என் தேக ஸ்திதியைப் பார்த்துத் துக்கித்தார். “இதற்குத் தமிழில் புட்டாளம்மை என்று சொல்லுவார்கள். இரண்டு மூன்று நாட்களுக்குள் இது இறங்கிவிடும்; பிறகு நாம் திருநெல்வேலி போய்ச் சேரலாம்” என்று அவருக்குத் தைரியம் சொன்னேன். அப்படியே மூன்றாம் நாள் அம்மை இறங்கவே வைத்தியர் அனுமதி பெற்று, ஒரு பெட்டி நிரம்ப நான் சாப்பிட வேண்டிய மருந்து முதலியவைகளுடனும் ரங்கவடிவேலுடனும் புறப்பட்டுப் போனேன், திருநெல்வேலிக்கு. மூன்று நாட்களாக மெல்லின்ஸ்பூட் தவிர வேறு ஆகாரம் இல்லாமையால், மிகுந்த பலஹீனமான ஸ்திதியிலிருந்தேன். ரெயிலிலும் இந்த ஆகாரம்தான். ஸ்டேஷனிலிருந்து புறப்படும் பொழுது என்னைக் கண்ட சில சிநேகிதர்கள், “என்ன சம்பந்தம், இந்த ஸ்திதியிலா, நீ திருநெல்வேலிக்குப் போய் நாடகம் ஆடப்போகிறாய்!” என்று கேட்டார்கள். ‘ஸ்வாமியிருக்கிறார் என்னைக் காப்பாற்ற’ என்று நான் அவர்களுக்குத் தைரியம் சொல்ல வேண்டியதாயிற்று. இப்பொழுதாவது ரயில் கொஞ்சம் சீக்கிரமாகப் போகிறது. அப்பொழுது சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குப் போகச் சரியாக 24 மணிநேரம் பிடித்தது. என்னுடைய சுயநன்மையை மாத்திரம் நான் கவனித்திருப்பேனாயின், நான் அப்பிரயாணம் செய்தே இருக்க மாட்டேன். ஆயினும், எங்கள் சபைக்கு என்னால் ஒரு கஷ்டமும் நேரிடக் கூடாதென்றும், எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகு நான் - நின்றுவிட்டால், ரங்கவடிவேலு தானும் போவதற்கில்லையேயென்று வருத்தப்படுவாரென்றும் கருதினவனாகி, என் தேக சிரமத்தைப் பாராமல் நான் பிரயாணம் செய்தேன். மறுநாள் சாயங்காலம் திருநெல்வேலி ஸ்டேஷனில் போய் நான் இறங்கிய பொழுது, எனக்கு முன்பாக அங்கு போய்ச் சேர்ந்தவர்களுள் டி. வெங்கடரமணய்யாவும், டி.எல். ராஜகோபால ஐயரும் மாத்திரம் ஸ்டேஷ்னுக்கு வந்திருந்தனர். மற்றவர்களெல்லாம் சௌக்கியமாக இருக்கிறார்களா என்று நான் வினவிய பொழுது, அவர்களுள் ஒருவர், ஸ்டேஷனுக்கு வந்து