பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/600

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

585


என்னை வரவேற்க விரும்பிய மற்ற ஆக்டர்களை அப்படிச் செய்யவேண்டியதில்லை யென்று தடுத்ததாக இரகசியமாகத் தெரிவித்தார். இதைக் கேட்டவுடன் எனக்குக் கோபம் வரவில்லை. கொஞ்சம் துக்கம்தான் வந்தது. அதுவும் என் பொருட்டல்ல - “அந்தோ! இவ்வுலகில் யார் தப்புச் செய்தாலும் அதற்குத் தக்க பிராயச்சித்தம் அனுபவிக்க வேண்டி வருமே. இதையறியாதிருக்கின்றனர் அநேகரே” என்றே எனக்குத் துயரம் தட்டியது. இம்மாதிரியான சந்தர்ப்பங்களிலெல்லாம், ஒரு மனிதனுடைய கடமையென்னவென்றால், தன்மீது ஏதாவது தவறிருக்கிறதா என்று ஆய்ந்து பார்க்க வேண்டியது முதலில்; பிறகு தன் மீது தவறில்லை என்று கண்டறிந்தால், அத் தவறு இழைத்தவர்மீது கோபங்கொள்ளாது, அவர் பொருட்டுத் துக்கப்படுவதே நற்குணமெனும் உண்மையை என்னுடைய பால்யத்தில் அறியாது 50ஆவது வயதில் கண்டேன்! இவ்வாறு என் மனத்தைக் கோபத்தினின்றும் திருப்பி, நல்வழிக்குக் கொண்டு வந்தது எனக்கு மிகவும் நன்மை அளித்திருக்கிறது; அந்நன்மையை இதை வாசிக்கும் என் இளைய நண்பர்களும் பெறுவார்களாக என விரும்பியே இதை இங்கு எழுதலானேன். இச்சந்தர்ப்பத்தில் தெய்வப் புலமை வாய்ந்த பொய்யாமொழிப் புலவராகிய திருவள்ளுவர் எழுதிய குறள் எனக்கு நினைவிற்கு வருகிறது. “இன்னாசெய்தாரை யொறுத்தல், அவர் நாண நன்னயஞ் செய்து விடல்” என்பதன் உண்மையை என் சிறு வயதிலேயே அறியாமற் போனது என் குற்றமாம். இக் குறளினடியில் பரிமேலழகர், “விடல்” என்கிற பதத்திற்கு மிகவும் அருமையாய் அர்த்தம் எழுதியிருக்கிறார். தமிழ்ப் பாஷையில் விருப்பமுள்ள இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அவ்வுரையைப் பார்த்து அறிந்து கொள்வார்களாக.

ஸ்டேஷனிலிருந்து அருகாமையிலிருந்த எட்டயபுரம் ஜமீன்தாருடையதான எங்கள் விடுதிக்குப் போனவுடன், சந்தோஷமாகக் கலந்து பேசி, அவர்களையெல்லாம் சீக்கிரம் வேடம் பூணுவதற்காக நாடக சாலைக்குப் போகும் படி தூண்டினேன். அப்பொழுது அவர்களுட் சிலர் ஏதோ ரகசியமாய்ப் பேசிக்கொண்டு, நீங்களிருவரும் (நானும்