பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/604

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

589


சரியாயிற்று என்று நிரூபிப்பதற்காக இதை நான் எழுதவில்லை. இப்படிப்பட்ட விஷயங்களிலெல்லாம் அனுபவம் இல்லாதவர்கள், அனுபவம் உள்ளவர்களுடைய அபிப்பிராயத்திற்குக் கொஞ்சம் கௌரவம் கொடுக்க வேண்டுமென்று என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே இதை எழுதலானேன்.

இதற்கடுத்த நாடகமாக ஹரிச்சந்திர நாடகம் ஆடப்பட்டது. இதற்கு வரும்படி மிகவும் குறைவாக வந்தது. இந்த நாடகத்தின் வரும்படியைப் பற்றி இவ்வளவு முக்கியமாக நான் குறிக்கவேண்டிய காரணம், இதை வாசிக்கும் எனது நண்பர்கள் சீக்கிரம் அறிவார்கள். இதற்கடுத்த நாடகம் “காலவ ரிஷி.” இந்நாடகத்திற்குச் சுமாராக வசூலாயிற்று. இங்கு குறிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், முதல் நாடகமாகிய, “லீலாவதி-சுலோசனா"வில் ஆடிய பிறகு எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு இதில்தான் ஆடினார். அதன்மீது எங்கள் நண்பர்களில் சிலர், ரங்கவடிவேலு ஆடினால்தான் வசூல் அதிகமாக ஆகிறார் போலிருக்கிறது என்று பேசத் தலைப்பட்டனர். இது மற்றவர்களுக்குத் திருப்திகரமாயில்லையென்று நான் நினைக்க வேண்டியவனாயிருக்கிறேன். அவ்வாறு நான் எண்ணியது சரியோ தப்போ என்று பின் வருவதைப் படித்து இதை வாசிக்கும் எனது நண்பர்கள் தீர்மானிக்கலாம். இதற்கப்புறம் நடத்திய நாடகங்கள் பீஷ்மப் பிரதிக்ஞையும் நந்தனாருமாம். இவைகளிரண்டிலும் எனதுயிர் நண்பர் ஒரு பாத்திரமும் எடுத்துக் கொள்ளவில்லை. பீஷ்மப் பிரதிக்ஞைக்கு இங்கு நடத்திய நாடகங்களுளெல்லாம் மிகவும் குறைந்த வசூலாயிற்று. எனக்கு ஞாபகமிருக்கிறபடி நாற்பது ரூபாயோ நாற்பத்திரண்டு ரூபாயோ வந்தது. அன்றியும், இந்நாடகத்தில் ஒருவரும் சரியாகத் தங்கள் பாடங்களைப் படிக்காதது மிகவும் ஆபாசமாயிருந்தது. எனதுயிர் நண்பர் ஜ்வரத்தினால் நாடகசாலைக்கு வராதிருக்கவே, நான் நாடகம் ஆரம்பமானவுடன் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு, அவரைக் கவனிக்க, எங்களிருப்பிடம் போய்ச் சேர்ந்தேன். நாடகம் முடிந்தவுடன், அந்நாடகாசிரியராகிய எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் என்னிடம் வந்து, தன்னுடைய நாடகமானது மிகவும் ஆபாசமாய் நடிக்கப்பட்டதென்று