பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/605

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

590

நாடக மேடை நினைவுகள்


கண்ணீருடன் குறை கூறினார். இதை நான் இங்கு முக்கியமாகக் குறித்ததற்குக் காரணம் நாடகாசிரியர்கள், தங்கள் நாடகங்களை மற்றவர்கள் ஆட உத்தரவு கொடுக்கும் போது, அந்நாடகங்களைச் சரியாக நடத்தும்படி வற்புறுத்த வேண்டுமென்பதை என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே.

அடுத்த நாடகமாகிய நந்தன் சரித்திரத்திற்கும் வரும்படி குறைவாக வந்தது. இது சென்னையில் எப்பொழுது ஆடிய போதிலும் நல்ல வசூலைக் கொடுக்கும்படியான நாடகம். ஆகவே இதிலாவது சபைக்கு லாபம் கிடைக்குமென எண்ணியிருந்த எங்கள் கோரிக்கை கைகூடாமற் போயிற்று. இதன்பேரில் எங்கள் சபையின் நிர்வாக சபையாரில் சிலர், (அவர்கள் பெயரை இங்கு எழுதுவதற்கு எனக்கிஷ்டமில்லை) அரண்மனையில் மகாராஜாவின் கட்டளைப்படி ஆடவேண்டிய ஒரு நாடகத்தை சீக்கிரம் முடித்துக் கொண்டு, இங்கு ஆடத் தீர்மானிக்கப்பட்டிருந்த கடைசி இரண்டு நாடகங்களையும் விட்டுவிட்டு சென்னைக்குத் திரும்பிப் போக வேண்டும் என்று பிரேரேபித்தார்கள். இதையறிந்த எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, அடங்காக் கோபமும் துயரமும் கொண்டவராய், “இவர்கள் வேண்டுமென்றே, என்மீதுள்ள பொறாமையினால் சொல்லுகிறார்கள். நான் இந்த நிர்வாக சபைக் கூட்டத்திற்கு வரமாட்டேன்!” என்று என்னிடம் கூறிவிட்டு, விலகிவிட்டார். அதன்பேரில் நான் ‘அவர்கள் அவ்வாறு பிரேரேபித்தால் பிரேரேபிக்கட்டும். நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லிப் பார்ப்போம்; நம்முடைய கடமையை நாம் செய்வோம்; பிறகு அவர்கள் அப்படித் தீர்மானித்தால் அவர்கள் பாடு” என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் ஒரே பிடிவாதமாய், “நான் வர மாட்டேன், நீங்கள் வேண்டுமென்றால் உங்கள் தொண்டையைக் கிழித்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஒன்றும் உங்கள் பேச்சைக் கேட்கப் போகிறதில்லை! போய் வாருங்கள்” என்று மனங்கசிந்து கூறினார். இதில் முக்கியமாக அவருக்குக் கோபத்தையும் துக்கத்தையும் விளைவித்தது என்னவென்றால், இப்படி விட்டுவிட வேண்டுமென்று யோசிக்கப்பட்ட இரண்டு நாடகங்கள் மனோஹரனும்