பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/606

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

591


வள்ளி மணமுமாம். இதில் இரண்டிலும் எங்களிருவருக்கும் முக்கியமான பாத்திரங்களிருந்தன. நான் உடனே இவ்வாறு யோசித்தேன். நான் இக்கடைசி இரண்டு நாடகங்களையும் இங்கு ஆட வேண்டுமென்பது எனது நண்பனது நன்மைக்காகவா? அல்லது எனது நன்மைக்காகவா? அல்லது இவ்விரண்டுமன்றி எங்கள் சபையின் நன்மைக்காகவா? முந்தியதாயிருந்தால் நான் மற்றவர்கள் சொல்லுகிறதை ஒப்புக்கொள்ள வேண்டும். பிந்தியதாயிருந்தால் என்னாலியன்ற அளவு அந்நாடகங்களைப் போடும்படி முயல வேண்டும். இந்த யோசனையில், அவ்விரண்டு நாடகங்களும் எப்படியும் சபைக்குப் பெயரையும் பணத்தையும் கொண்டு வரும் என்ற தீர்மானத்திற்கு வந்து, நிர்வாக சபையின் கடைசி இரண்டு ஆட்டங்களையும் நிறுத்தி விடுவதுதான் உசிதம் என்று பிரேரேபிக்கப்பட்டது. ஏறக்குறைய எல்லோரும் அதை ஆமோதித்தனர். அதன் பேரில் அவ்வாறு செய்யலாகாது, அந்த இரண்டு ஆட்டங்களுக்கும் நல்ல வசூலாகுமென்று எனக்குத் தோன்றுகிறதெனக் கூறியபோது, எதிர்க் கட்சியைச் சேர்ந்த எனது நண்பர்களில் ஒருவர், “ஆமாம்! முப்பது முப்பத்தைந்து ரூபாய் வரப்போகிறது ஒவ்வொரு ஆட்டத்திற்கும், அதற்காக எங்களையெல்லாம் இன்னும் நான்கைந்து நாட்கள் இங்கு இருக்கும்படிச் சொல்லுகிறாயா?” என்றார். அதன்மீது எனது நியாயங்களையெல்லாம் எடுத்துக் கூறி முடிவில் இவ்வாறு கூறினேன். “மற்ற நியாயங்களெல்லாம் இருக்கட்டும். இதைச் சற்று யோசித்துப் பாருங்கள். நாமோ அமெச்சூர்ஸ் வேடிக்கைக்காக நாடகமாடுபவர்கள். நாம் இந்த ஊரில் இன்னின்ன நாடங்கள் ஆடுவது என்று தீர்மானித்து விளம்பரம் செய்தபின், கடைசி இரண்டாட்டங்களையும் விட்டுவிட்டு ஊருக்குத் திரும்புவோமாயின், இவர்களுக்குப் பணம் வசூலாகவில்லை, பணம்தான் இவர்களுடைய முக்கியக் கருத்துப் போலும் என்று நம்மைப் பார்த்து நான்கு பெயர் நகைக்க இடமுண்டாகும். இது நம்முடைய சபையின் நற்பெருக்கு ஹீனமாகும். எனக்கென்னவோ இவ்விரண்டு நாடகங்களிலும் நல்ல வசூலாகுமென்று தோன்றுகிறது. அதற்குக் காரணத்தைக் கூறுகிறேன். நீங்கள்