பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/607

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

592

நாடக மேடை நினைவுகள்


நான் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொண்டால், உங்கள் இஷ்டம், என் கடமையை நான் கழிக்கிறேன். நான் இங்கு வந்தது முதல், முதல் நாடகமானவுடன், ‘இன்னும் மற்ற எந்தெந்த நாடகங்களில் ரங்கவடிவேலு நடிக்கப் போகிறார்?’ என்று பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். ஆகவே, அவர் முக்கியப் பாத்திரமாக நடிக்கும் இவ்விரண்டு நாடகங்களுக்கும் ஏராளமான கூட்டம் வரும் என்று எனக்குள் ஏதோ சொல்கிறது. இப்பொழுது இம்மாதிரி ஏற்படுத்தப்பட்ட நாடகங்களை விடுவீர்களாயின், இன்னொருமுறை சென்னையிலிருந்து வெளியூருக்குப் போகவேண்டுமென்று பிரேரேபணை செய்வீர்களாகில், மற்ற ஆக்டர்கள் இம்மாதிரியாக நாம் வரும் நாடகங்களையும் விட்டு விட்டாலும் விடுவார்களல்லவா? ஆகவே நாம் கஷ்டம் எடுத்துக் கொண்டு வெளியூருக்கு இச்சபையுடன் போவதில் என்ன பிரயோசனம்? என்று யோசிக்கமாட்டார்களாவென்று ஆக்டர்களாகிய நீங்களே யோசித்துப் பாருங்கள். என் மனத்திலிருப்பதைப் பகிரங்கமாகச் சொன்னேன். பிறகு உங்களிஷ்டம். நான் கூறியது உங்களுக்கு சம்மதியானால் ஒப்புக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் எனக்கு விரோதமாகத் தீர்மானியுங்கள்” என்று கூறி முடித்தேன். அதன்பேரில், கடைசி இரண்டாட்டங்களையும் எப்படியாவது விட்டுவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த சிலர் தவிர, மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக என் பக்கம் திரும்பினார்கள். அப்படியிருந்தும், ஒரு தட்டினால் என்பட்சம் தீர்மானிக்கப்பட்டு, கடைசி இரண்டு ஆட்டங்களையும் ஆடிவிட்டுத் தான் பட்டணம் திரும்பிப் போக வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இதுவும் தெய்வத்தின் கருணை யென்று எண்ணினவனாய், இச் சமாச்சாரத்தை எனதுயிர் நண்பரிடம் போய்ச் சொல்லி அவரைச் சமாதானப் படுத்தினேன்.

பிறகு மறுநாள் ஜூலை மாதம் முதல் தேதி மஹாராஜாவின் அரண்மனையில் அவர் எதிரில், “காலவ ரிஷி” என்னும் நாடகத்தை ஆடினோம். அதைப்பற்றி விவரமாய்ப் பிறகு எழுதுகிறேன். முதலில் எங்கள் கடைசி இரண்டு நாடகங்கள் ஆடிய கோர்வையை முடிக்கிறேன்.