பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/608

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

593


கடைசி இரண்டு நாடகங்களில் “மனோஹரன்” நாடகம் ஜூலை மாதம் மூன்றாம் தேதி வைக்கப்பட்டது. இதற்கு முந்திய நாள் எங்கள் சபையில் ஹார்மோனியம் வாசிக்கும் மாதவ ராவ் என்பவர் எங்களிடம் வந்து, இவ்வூரில் ஒருவர் இந்தக் கடைசி இரண்டாட்டங்களுக்கும் கண்டிராக்டாக 750 ரூபாய் கொடுக்கிறேன் என்கிறார்; ஒப்புக்கொள்கிறீர்களா என்றார். அதைக் கேட்டவுடன் மிகவும் சந்தோஷத்துடன் எனதுயிர் நண்பர் உடனே ஒப்புக்கொள்ளலாம் என்றார். நான் மாத்திரம் அதற்கு ஆட்சேபித்தேன். எங்கள் சபையின் காரியதரிசி உட்பட அநேகர், இதை ஒப்பக்கொள்ளலாமே, இதைவிட இவ்விரண்டாட்டங்களுக்கு அதிகமாகவா வரப்போகிறது என்று என்னிடம் வந்து வற்புறுத்தினர். நான் மாத்திரம் ஒரே பிடிவாதமாய் ஒப்பவில்லை. அதன்பேரில் மற்றவர்களெல்லாம், எனதுயிர் நண்பர் உட்பட, மெஜாரிடி ஆக இவ்வாறு தீர்மானிக்கப் போகிறார்களென்று பயந்தவனாய் சில வருடங்களுக்கு முன், சபையின் பொதுக்கூட்டத்தார் உத்தரவின்றி, சபை ஆட்டங்களைக் கண்டிராக்டாக விடக் கூடாதென்று தீர்மானிக்கப்பட்டதை எடுத்துக் கூறி மறுக்கவே, அவர்கள் அதன்பேரில் ஒன்றும் செய்வதற்கில்லாமல் போயிற்று. ஆயினும் என்னுயிர் நண்பர் உட்பட, எல்லோரும் “இந்தப் பிடிவாதத்திற்கென்ன செய்வது?” என்று என்னைக் கடிந்து மொழிந்தனர். ரங்கவடிவேலு என்னிடம் தனியாய் “இதென்ன இது! எப்படியிருக்குமோ? மழைகிழை வந்தால் என்னாகும்? ஒருவேளை இவ்விரண்டு நாடகங்களுக்கும் 750 ரூபாய் வசூலாகாவிட்டால் என்ன செய்வது? அப்பொழுது எல்லோரும் நம்மைப் பரிகாசம் செய்ய மாட்டார்களா? எனக்காகவாவது உங்கள் பிடிவாதத்தை விடுங்கள்” என்று மன்றாடினார். “உனக்காகத்தான் இவ்வாறு பிடிவாதம் பிடிக்கிறேன், இதனுண்மையைப் பிறகு நீயறிவாய்!” என்று நான் பதில் சொல்ல, அவர் என்மீது கோபித்துக் கொண்டு இரண்டு மூன்று மணிநேரம் என்னுடன் பேசவும் இல்லை! எது எப்படி ஆனாலும், என் தீர்மானத்தினின்றும் மாறுவதில்லை “கிண்டாய நம” என்று உட்கார்ந்தேன்.