பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/609

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

594

நாடக மேடை நினைவுகள்


நாடக தினம் எனதுயிர் நண்பர் எண்ணியபடி காலை முதல் பெரும் மழை தொடங்கி, கொட்டு கொட்டென்று கொட்டியது. அன்று ஒரு பகலுக்குள்ளாக, பிறகு நான் வர்த்தமானப் பத்திரிகைகள் மூலமாக அறிந்தபடி 91/2 அங்குலம் மழை பெய்தது! அந்த நகரவாசிகள் அநேகர் இம்மாதிரியான மழை இதுவரையில் பெய்ததில்லை என்று கூறினர். இந்த மழையின் கொடுமையை அறிய வேண்டுமென்றால், இப்படிக் கணக்கிட்டுப் பார்க்கலாம். இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கொஞ்ச நாளைக்கு முன்பாக நாகப்பட்டணத்தில் பெரும் மழை பொழிந்து, அதிக பொருட்சேதமும், ஆடு மாடு முதலிய கால்நடைச் சேதமும் நேரிட்டதாகப் பத்திரிகைகளில் படித்திருக்கலாம்; அப் பெரும் மழையிலும், 24 மணிக்கு 15 அங்குல மழை பெய்தததாம்; இந் நாடக தினம் திருவனந்தபுரத்தில் 12 மணிக்குள்ளாக 91/2 அங்குலம் மழை பெய்திருக்கிறது! என் ஜன்மத்தில் இம்மாதிரியான பெரும் மழை சென்னையில் பெய்ததில்லை. இவ்வாறு பெருமழை பெய்யவே என்னுடைய நண்பர்களெல்லாம் 750 ரூபாய்க்கு இரண்டு நாடகங்களையும் கண்டிராக்டாக விடாமற் போனோமே! இப்பொழுது இந்த லாபமும் போய்விட்டதே என்று வருத்தப்பட்டு என்னை நிந்திக்க ஆரம்பித்தனர். எனதாருயிர் நண்பர் வாய் திறந்து மற்றவர்களைப்போல் கூறாவிட்டாலும், என்னை உற்றுப் பார்க்கும் போதெல்லாம், தன் மனத்தில் என்னைக் கடிந்து கொண்டாரென்று நினைக்கிறேன். இந்தக் கடைசி இரண்டு நாடகங்களும் வேண்டாம் என்று கூறியவர்கள் எனக்குப் பின்னால், “என்னவோ அதிகமாக வசூலாகி விடுமென்று சம்பந்தம் சொன்னானே. இப்பொழுது என்ன சொல்லப் போகிறான், பார்ப்போம்!” என்று கூறியதாகக் கேள்விப்பட்டேன். இவற்றுளெல்லாம் என் மனத்தில் அதிகமாக உறுத்தியது, எனதுயிர் நண்பனின் முகவாட்டமே; அதன்மீது மனம் தாளாதவனாய் நான் அதுவரையில் செய்திராத காரியமொன்றைச் செய்தேன். அந்நாள் வரையில் நான் எழுதிய நாடகமோ, அல்லது நாங்கள் ஆடும் நாடகமோ ஆடும் தினம் வந்தால், ‘இன்று நாடகம் சரியாக ஆடப்பட வேண்டும், ஒன்றும் குறைவாக இருக்கலாகாது,