பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/610

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

595


எல்லோருடைய மனத்தையும் திருப்தி செய்யவேண்டும்” என்று பரமேஸ்வரனைக் குறித்துப் பிரார்த்திப்பது வழக்கம்; ஆயினும் பணம் வசூல் அதிகமாக ஆகவேண்டுமென்று பிரார்த்திப்பதில்லை. அவ்வாறு செய்யக்கூடாது என்னும் கோட்பாடு உடையவனாகிருந்தேன் (இப்பொழுதும் அதை உடையவனாயிருக்கிறேன்). அன்றைத் தினம் அதனின்றும் தவறினேன். அன்று போஜனமானவுடன் வழக்கம்போல், என் பாகத்தை ஒருமுறை படித்துவிட்டு, “எப்படியாவது இன்று நல்ல வசூலாக வேண்டும், ஏராளமான ஜனங்கள் வரவேண்டும்” என்று பரமேஸ்வரன் கருணையைப் பிரார்த்தித்தேன். பிறகு நமது பிரார்த்தனை ஈடேறுமோ என்னவோ என்னும் ஏக்கத்துடன் நாங்கள் குடியிருந்த வீட்டின் மேல் மாடியில் உலாவிக் கொண்டிருந்தபொழுது, கீழே இருக்கும் எனது நண்பர்களில் ஒருவர் யாரோ ஒரு கிழவன் உங்களைப் பார்க்க விரும்புகிறான் என்று தெரிவித்தார். வரச்சொல் என்று நான் விடை கொடுக்க,"ஒரு வயோதிகன் மேல் மாடிக்கு வர, அவனை என்ன வேண்டும் என்று நான் வினவ, உங்கள் நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது” என்று அவன் கூறினான். நான் இருந்த மனோஸ்திதியில் “யார் உன்னைப் பார்க்க வேண்டாம் என்றது?” என்று கடுகடுத்து மொழிந்தேன். அதன் பேரில் அவன் “என் கையில் காசில்லை . ஓர் அரை ரூபாய் டிக்கட்டு கொடுத்தீர்களானால், உங்களுக்கும் புண்ணியம் உண்டு” என்று விடைபகர்ந்தான். அதன்மீது மனமிரங்கியவனாய், எங்கள் காரியதரிசியிடம் சொல்லி, அவனுக்கு என் கணக்கில் அரை ரூபாய் டிக்கட்டு ஒன்று வாங்கிக் கொடுத்தேன். இதை ஒரு பெரிய விஷயமாக இங்கு எழுதுகிறானே என்று இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்கள் என்னை ஏளனம் செய்யாமலிருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதை இங்கு எழுதியதற்கு இரண்டு முக்கியக் காரணங்களுண்டு. முதலாவது, இதைச் செய்தவுடன், அந்த வயோதிகனுடைய முகத்தில் தோன்றிய சந்தோஷம், என்னுடைய இருதயத்தில் இருந்த பெரும் பாரம் ஒன்றை நீக்கியது போல் எனக்கு உவகையைத் தந்தது. என்னுடைய குணாகுணங்களைப்