பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/611

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

596

நாடக மேடை நினைவுகள்


பற்றி நிஷ்பட்சபாதமாய் நான் ஆராய்ந்து பார்க்குங்கால், என்னிடம் சுயநன்மையை நாடும் தீய குணம் பெரும்பாலும் குடிகொண்டிருந்தது (இன்னும் குடிகொண்டிருக்கிறது) என்றே நான் சொல்லவேண்டும். அங்ஙனமிருக்க, மேற்சொன்னபடி, பிரதி பிரயோஜனம் ஒன்றையும் நாடாது மற்றவர்களுக்கு நான் ஏதேனும் சிறிது உதவி செய்யும் பொழுதெல்லாம், என் இருதயத்தில் அதுவரையில் இல்லாத ஒரு குளிர்ச்சி உண்டாகி சந்தோஷப்பட்டிருக்கிறேன். என்னைப் போன்ற சுய நன்மையை நாடும் சிலர்; இதைப் படிப்பவர்களுள் இருந்தாலும் இருக்கலாம்; அவர்களுக்கு இந்த எனது அனுபவம் சிறிது பலனைத் தரக்கூடும் என்று எண்ணியவனாய் இதை எழுதலானேன். இரண்டாவது காரணம், அந்த வயோதிகன் போனவுடன் பெய்துகொண்டிருந்த மழை இன்னும் அதிகமாகப் பெய்ய ஆரம்பித்த போதிலும், என் மனத்தில் இன்றிரவு நாடகத்திற்கு நல்ல பணம் வசூலாகுமென்று திடீரென்று தோன்றியது. நான் செய்த அல்ப காரியத்திற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று, எனது நண்பர்கள் என்னைக் கேட்கலாம்; இந்த இரண்டிற்கும் முடி போடுவது வெறும் பைத்தியம் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்களிற் சிலர் நகைக்கலாம். அப்படி நகைப்பவர்கள் மீது நான் குறை கூறமாட்டேன். அவர்கள், இவ்வாறு இவ்விரண்டிற்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது என்று எண்ணுவதற்கு என்ன நியாயமுண்டு? என்று என்னைக் கேட்பார்களாயின், அவர்களுக்குத் தக்க பதில் உரைப்பதற்கு அசக்தனாயிருக்கிறேன். ஆயினும் இவ்விரண்டிற்கும் நான் காரணமறியாத சம்பந்தம் ஏதோ உண்டென்று உறுதியாய் நம்புகிறேன்.

அன்று சாயங்காலம் ஆறு மணிக்குக்கூட அப்படியே பெருமழை பெய்துகொண்டிருந்தது. அருகிலுள்ள நாடக சாலைக்கு நான் போய்ப் பார்த்தபொழுது, நாடகமேடையின் பக்கத்தில் ஆர்மோனியம் வைக்கும் இடத்தில் மழை ஜலம் தேக்கிடையாயிருந்தது. அதை வெளிப்படுத்த ஒரு வாய்க்கால் வெட்டி, அதன் மூலமாக அந்த ஜலத்தை ஒழித்தோம்! சுமார் 81/2 மணிக்குக் கொஞ்சம் மழை நின்றது. மழை நின்று விட்டதென்று நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த பொழுது மறுபடியும் 1/2 மணி நேரத்திற்கெல்லாம் பெரும்