பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/612

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

597


மழை தொடங்கியது! ஆயினும் இந்த அரைமணி நேரத்திற்குள்ளாக கடைசி வகுப்பு தவிர, மற்ற வகுப்புகளெல்லாம் ஜனங்கள் நிரம்பி விட்டனர்! அன்றைத் தினம் நாடக ஆரம்பத்திற்கு முன் எங்கள் சபை வழக்கப்படி பிள்ளையார் பட்டைப் பாடும்பொழுது என் வேண்டுகோளுக்குக் கருணை கூர்ந்தனரே பகவான் என்று ஆனந்தக் கண்ணீருடன் அப் பாட்டைப் பாடினேன். அன்று எனக்கு ஞாபகமிருக்கிறபடி 850 ரூபாய்க்குமேல் வசூலாகியது. இதையறிந்த எனதுயிர் நண்பர் அன்று நடித்தது போல் என்றும் நடிக்கவில்லை யென்றே கூறுவேன். நானும் அன்று நடித்ததுபோல், சில சமயங்களில்தான் மிகுந்த குதூஹலத்துடன் நடித்திருக்கிறேன்.

நாடகம் முடிவதற்கு ஏறக்குறைய காலை 3.30 ஆச்சுது. வந்தவர்களில் ஒருவரும் அதுவரையில் தங்கள் இடத்தை விட்டுப் பெயர்ந்திலர். நாடக முடிவில் நடந்த ஒரு சிறு வேடிக்கை எனக்கு ஞாபகமிருக்கிறது. நாடகம் முடிந்தவுடன் அநேகர் எனக்குத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களுமாக வேஷம் தரிக்கும் இடத்திற்கு வந்து, எங்களைக் கொண்டாடிப் பேசினர். அதில் ஒருவர், “என்ன சார், முதலியார்வாள், நாடகம் முடிந்தபிறகுதான் நீங்கள் இந் நாடகத்தில் ஒரு பாட்டும் பாடவில்லையென்று கண்டறிந்தோம்! ஏன் நீங்கள் பாடுகிறதில்லை?” என்று கேட்டார். இதை நான் ஆக்டு செய்ததற்கு, ஒரு முக்கியமான புகழாகக் கொள்கிறேன். முதன்முறை இந் நாடகத்தில் நான் நடித்தபிறகு, இவ்வேடம் ஏறக்குறைய நாற்பது முறை நான் தரித்து ஆடும்பொழுதெல்லாம் ஒரு பாட்டும் பாடியதில்லை. அப்படியிருந்தும் இந்நாடகம் நன்றாக இல்லையென்று ஒருவராவது சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை. நாடகமாடுவதென்றால் பாட்டு இல்லாமல் உதவாது என்று அபிப்பிராயப்படுவோர் இதைச் சற்றுக் கவனிப்பாராக.

அன்று நாடகம் முடிந்து எங்கள் வேஷங்களைக் கலைத்தவுடன், ஏதோ கொஞ்சம் ஆகாரம் கொண்டுவிட்டு, உடனே மோட்டார் வண்டியில் எனதுயிர் நண்பரும் நானும் கன்னியாகுமரிக்குப் பிரயாணம் புறப்படும்படி நேரிட்டது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. சில தினங்களுக்கு .