பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/614

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

599


கன்னியாகுமரி க்ஷேத்திரமும் சமுத்திரக் கட்டமும், இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அவசியம் பார்க்கவேண்டியவை; இவற்றின் அழகையும் மேன்மையையும் பற்றி ஈசுவரன் கிருபையால், எனக்குச் சந்தர்ப்பம் வாய்க்குமாயின், பிறகு எனது நண்பர்களுக்குத் தெரிவிக் கலாமென்றிருக்கிறேன். இவ்வூரைவிட்டுத் திருவனந்தபுரம் வரும்பொழுது, பாதி வழியில் எங்கள் மோட்டார் வண்டியின் டயர் (Tyre) வெடித்துப் போய்விட்டது திடீரென்று! வண்டிக்காரன் மிகுந்த புத்திசாலித்தனமாய் எவ்வளவோ அதை மராமத்து செய்து பார்த்தான்; பிரயோஜனப்படவில்லை. என்ன காரணத்தினாலோ, வேறு டயர் கொண்டுவரவில்லை! இரவு எட்டுமணியாகி விட்டது; பாதையில் ஜன சந்தடியும் அற்றுப்போய் விட்டது! என்ன செய்வது? நாங்கள் பட்ட துயரத்தைவிட எங்களை அழைத்துவந்த நண்பர், இவர்களுக்கு இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறோமே என்று அதிகத் துயரப்பட்டார். பிறகு வண்டியை வண்டிக்காரன் வசம் விட்டுவிட்டு, சுமார் இரண்டு மைல் நடந்து ஒரு குக்கிராமம் போய்ச் சேர்ந்தோம். அதன் பெயரும் எனக்கு ஞாபகமில்லை. இதற்குள் ஒன்பது மணியாகிவிட்டது. எங்களுக்குப் பசி அதிகமாய்விட்டது. அந்தச் சிறு கிராமத்திலிருந்த வீடுகளெல்லாம் மூடப்பட்டிருந்தன. பிறகு அங்கு ஒரு சத்திரத்திற்குப் போய் அச்சத்திரப் பிராமணனை, கதவைத் தட்டியெழுப்பி, ஏதாவது உணவு கிடைக்குமா என்று கேட்க, அப்பிராமணன், ‘ஐயோ! இப்பொழுது வந்தீர்களே! எல்லாம் சாப்பிட்டாய் விட்டதே! கடைகளும் மூடப்பட்டனவே! வேண்டு மென்றால் சாதம் வடித்துக் கொடுக்கிறேன். வீட்டில் கொஞ்சம் மோர் இருக்கிறது சாப்பிடுங்கள்” என்று சொன்னார். அவ்வளவாவது சொன்னாரே என்று அவரை வாழ்த்திப் பிறகு மோர் சாதம் சாப்பிட்டு அன்றிரவு அந்தச் சத்திரத்தின் மேல் மாடியில் கழித்தோம். காலை எழுந்து திருவனந்தபுரம் போகும் பஸ் வண்டி வரும், அதில் போகலாமென்று தீர்மானித்தோம். நாங்கள் திரும்பி வரவில்லையேயென்று எங்கள் சபை நண்பர்களெல்லாம் வருத்தப்படுவார்களேயென்று, எண்ணமிட்டுக்கொண்டே அன்றிரவு தூங்கினேன்.