பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/615

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

600

நாடக மேடை நினைவுகள்



மறுநாள் காலையிலெழுந்து திருவனந்தபுரம் போகும் பஸ் ஒன்றில் ஏறி, நாங்கள் குடியிருந்த வீட்டிற்குப் போய், முன்நாள் இரவு வராததற்குக் காரணத்தை என் நண்பர் களுக்குக் கூறினோம். அன்றிரவு வள்ளித் திருமணம் என்னும் நாடகத்தை ஆடினோம். கடைசி இரண்டு நாடகங்களையும் விட்டுவிட வேண்டுமென்று பிரயத்தனம் செய்த எனது நண்பரிற் சிலர், “மனோஹரன்” நாடகத்திற்குத்தான் ரூபாய் அதிகமாக வந்தது; அதற்குக் காரணம் மனோஹரன் நாடகம் மிகவும் பிரசித்தி பெற்றிருப்பதாம்; இந்த வள்ளி நாடகத்திற்கு என்ன வரப்போகிறது? பார்ப்போம், என்று என் காதில் விழும்படியாகப் பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கேட்டும், எல்லாம் ஈசுவரன் பாரம், நாம் இதற்குப் பதில் கூறுவானேன் என்று சும்மா இருந்துவிட்டேன். அன்றைத்தினம் மழை ஒன்றும் இல்லாதிருந்தது. இந்த நாடகத்திற்கு ஒரு மணிக்கு முன்பாக நான் வேஷம் போட்டுக் கொண்டிருந்த பொழுது, நாடக சபைக்குள் ஜனங்கள் சேரும் தொனியினால் அன்றைக்கும் அதிகமாக ஜனங்கள் வருகிறார்கள் என்பதை அறிந்தேன். ஆயினும், எனதாருயிர் நண்பருக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த எனது நண்பர்களில் ஒருவர் டிராப்படுதாவில் இதற்கென்று செய்து வைக்கப்பட்டிருந்த ஒரு துவாரத்தின் வழியாக நாடகசாலையில் வந்திருக்கும் ஜனங்களைப் பார்த்துவிட்டு, நாங்களிருவரும் (ரங்கவடிவேலுவும் நானும்) கேட்கும்படியாக, “ஒரு ஐம்பது ரூபாய் வசூலாயிராது; ஜனங்களின் கூச்சல் மாத்திரம் அதிகமாயிருக்கிறது!” என்று கூறினார். அதைக்கேட்டு, கொஞ்சம் புன்சிரிப்புடையவனாய் என் வேஷத்தின்மீது கவனமாயிருந்தேன். அதன் பேரில் ரங்கவடிவேலு என்னருகில் வந்து “என்ன! இவர் (அவர் பெயரைச் சொன்னார். அதை இங்கு எழுத என் மனம் இடங்கொடுக்கவில்லை) இப்படிச் சொல்லுகிறாரே! இன்றைக்கு நல்ல வரும்படி வருமா?” என்றார். அதற்கு “அவசரப்படாதே, நீ கேட்ட கேள்விக்குப் பதில், நாடகம் ஆரம்பமானவுடன் சொல்லுகிறேன். அதுவரையில் உன் தலையை நீட்டி ஹாலில் எத்தனை பெயர் வந்திருக்கிறர்கள் என்று எண்ண வேண்டாம்! நீ ஒன்றுக்கும் பயப்படாதே!"என்று பதில் உரைத்தேன். அன்றைத் தினம் நாடக ஆரம்பத்