பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/617

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

602


ஆக்ஞாபித்தார். அதன்மீது என்ன நாடகம் ஆடுவதென்ற கேள்வி வந்தபொழுது, நாங்கள் ஆடக்கூடிய நாடகங்களின் கதைகளின் சுருக்கங்களை யெல்லாம் திவான் மூலமாக அனுப்ப, அவர், ‘காலவ ரிஷி’ சரித்திரம் புராணக் கதையாயிருப்பதால், அந்தப்புரத்து ஸ்திரீகளும் அறியக்கூடியதாயிருப்பதால், அதை ஆடவேண்டுமென்று தெரிவித்தார். அதை ஆடுவதாக ஒப்புக்கொண்டு தக்க ஏற்பாடுகளைச் செய்து அரண்மனையிலே ஒரு மண்டபத்தில் இதற்கு வேண்டிய திரைகளையெல்லாம் அனுப்பி, அரங்கமொன்று ஏற்படுத்தினோம். இங்கு இந்நாடகம் நடத்தியது கொஞ்சம் விந்தையானதால், அதைச் சற்று விவரமாக எழுத விரும்புகிறேன்.

அரண்மனையில், ‘காலவ ரிஷி’ ஆட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பிறகு, அரண்மனையிலிருந்து இன்னின்னபடி நடக்கவேண்டும் என்று எங்களுக்குச் சில நிபந்தனைகள் சொல்லி அனுப்பப்பட்டன; 8 மணிக்கு ஆரம்பமாகி, நாடகம் 101/2 மணிக்குள்ளாக முடிய வேண்டுமென்றும், அரங்கத்தின் மீதிருக்கும் வெளிச்சங்கள் மஹாராஜா உட்கார்ந்திருக்குமிடத்தில் பிரகாசிக்கக் கூடாதென்றும், ஆக்டர்கள் மஹாராஜா உட்கார்ந்திருக்குமிடத்தை நேராகப் பார்க்கக் கூடாதென்றும், ஆக்டர்களும் பக்க வாத்தியக்காரர்களும் தவிர, மற்றொருவரும் அங்கு வரலாகாதென்றும், இம்மாதிரியான சில நிபந்தனைகள் சொல்லி அனுப்பப்பட்டன; அவைகளுக்கு ஒப்புக் கொண்டு அவ்வாறே ஏற்பாடுகள் செய்தோம். எட்டு மணிக்கெல்லாம் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறதே யென்று சாயங்காலம் 3 மணிக்கெல்லாம் அரண்மனைக்குப் போய் வேஷம் தரிக்க ஆரம்பித்தோம். ஆக்டர்கள் தவிர மற்றவர்கள் வரவேண்டியதில்லை என்று உத்தரவானதன் பேரில், எங்கள் சபையுடன் வந்த ஏறக்குறைய எல்லா அங்கத்தினரும் ஆக்டர்களாக மாறிவிட்டனர்! நாடகம் நடக்கும் பொழுது பக்கத்திலிருக்கும் யாரும் பார்க்கக் கூடாதென்று கேட்கப்பட்டபடியால், புராம்டர் வேண்டாமென்று தீர்மானித்து, ஆக்டர்களுடைய புஸ்தகங்களையெல்லாம் வீட்டில் கட்டிப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு வந்தோம். அன்றிரவு நாடக முழுவதும்