பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/619

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

604

நாடக மேடை நினைவுகள்


விட்டெழுந்து நின்று, ஆங்கிலத்தில், நாடகமானது மிகவும் நன்றாயிருந்ததென்றும் தாம் மிகவும் சந்தோஷப் பட்டதாகவும் கூறி, எங்கள் சபைக்கு வந்தனம் அளித்தனர். பிறகு திவான் அவர்கள், “மஹாராஜா அவர்கள் இம்மாதிரியாக ஒரு சபையையும் புகழ்ந்து வந்தனம் செய்ததில்லை. உங்கள் பாடு அதிர்ஷ்டம்தான்” என்று மறுநாள் என்னிடம் கூறினார். மஹாராஜாவின் மனத்தை இவ்வாறு சந்தோஷிக்கச் செய்தோமே என்று நான் மிகவும் சந்தோஷப் பட்டேன். மஹாராஜா அவர்களும், அவரது மனைவிகளும், நாடகத்தை நன்கு மதித்தனர் என்பதற்கு முக்கியமான அத்தாட்சி, மறுநாள் இன்னொரு நாள் நாடகம் ஆட முடியுமாவென்று எங்களைக் கேட்டனுப்பியதேயாம். நாங்கள் சீக்கிரம் திருவனந்தபுரத்தை விட்டுப் போகத் தீர்மானித்தபடியால், எங்களை மன்னிக்க வேண்டுமென்று சொல்லியனுப்ப வேண்டியதாயிற்று.

திருவனந்தபுரத்திலிருந்த பொழுது, மஹாராஜா அவர்கள் அரண்மனையிலேயே எங்களுக்கு ஒரு பெரும் விருந்தளித்தனர். இஃதன்றி திவான் பஹதூர் டி. ராகவையா அவர்களும் விஸ்வநாதக் கோனார் அவர்களும், வக்கீல் சங்கரசுப்பைய்யர் அவர்களும், டாக்டர் . ஆர். சங்கர சுப்பய்யர் அவர்களும் எங்கள் சபையோருக்கு விருந்தளித்தனர். இவர்களுக்கெல்லாம் என் வந்தனத்தை இதன் மூலமாகச் செலுத்துகிறேன். முக்கியமாகக் காலஞ்சென்ற திருவாங்கூர் மஹாராஜா இச்சமயம் எங்கள் சபையின் கட்டிட பண்டிற்கு ரூ.2500 அளித்து எங்கள் சபைக்குச் செய்த கௌரவத்தையும் உபகாரத்தையும் நான் என்றும் மறக்க முடியாது.

இம்முறை சென்னையை விட்டு வெளியூர்களுக்குப் போய் வந்ததனால், சபைக்கு மொத்த வரும்படியை விடச் செலவு அதிகம்; மொத்த நஷ்டம் 3,057-4-10 ஏற்பட்டது. நாங்கள் திருவனந்தபுரத்தில் கடைசி இரண்டு நாடகங்கள் ஆடாதிருந்தால், இந்த நஷ்டமானது, ஏறக்குறைய 5000 ரூபாயாயிருக்கும். இவ்வாறு சபைக்குப் பெரும் நஷ்டம் வந்ததன் பலன் என்னவென்றால், இது முதல் நான்கைந்து வருடங்கள் வரைக்கும் சபையானது வெளியே போய் நாடகமாடலாம் என்னும் பிரஸ்தாபமே இல்லாமற் போயிற்று.