பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/621

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

606

நாடக மேடை நினைவுகள்


எங்களிருவருடைய கொள்கை. அதன்படி இவ்வருஷம் முக்கோடி ஏகாதசி தினம், ஒரே நாளில் இரண்டு நாடகங்கள் போட்டுப் பார்த்தோம். சாயங்காலம் 51/2 மணி முதல் “வேதாள உலகம்” என்னும் தமிழ் நாடகமும், பிறகு 8½ மணி முதல் இரவு 21/2 மணி வரையில் ‘பிரஹ்லாதன்’ என்னும் தெலுங்கு நாடகமும். இதைப்பற்றி நான் எங்கள் நிர்வாக சபையில் முதலில் - பிரேரேபித்தபொழுது, சில தெலுங்கு அங்கத்தினர் சாயங்காலம் போடும் தமிழ் நாடகத்திற்கு ஒருவரும் வரமாட்டார்கள் என்று ஆட்சேபித்தனர். இரண்டு நாடகங்களுக்கும் நல்ல வசூலாயிற்று; தமிழ் நாடகத்திற்கு 333-4-0 ரூபாயும் தெலுங்கு நாடகத்திற்கு 760-12-0 ரூபாயும்; ஆகமொத்தம் ஒரே நாளில் சபைக்கு நாடக வாயிலாக 1,094-0-0 ரூபாய் வசூலாயிற்று. இதை அறிந்தபின் சாயங்கால நாடகத்திற்கு ஒன்றும் வராது என்று சொன்னவர்கள், கம்மென்று இருந்துவிட்டார்கள்; நானும் என் கோட்பாட்டின்படி, அவர்களை ‘நீங்கள் சொன்னீர்களே, என்னவாயிற்று?’ என்று கேட்காமலிருந்து விட்டேன். இதை இங்கு எடுத்து எழுதியதற்கு முக்கியக் காரணம், நாம் எதையும் பிரயத்தனம் செய்து பார்க்க வேண்டுமென்று என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே. இச் சந்தர்ப்பத்தில், உலகிலெல்லாம் மிகுந்த தனவந்தன் என்று பெயர்பெற்ற ஹென்றி போர்ட் என்பவர் ஒருமுறை கூறியது ஞாபகம் வருகிறது. “எந்தப் பிரயத்தினத்திலும் தோல்வி என்பது கிடையாது; ஒரு பிரயத்தனத்தில் நாம் கோருவது கைகூடாவிட்டால், அதையே பிறகு வெற்றியடைய நமக்கு அனுபவமாகக் கொள்ள வேண்டும்” என்பதாம்.

இவ்வருஷம் எங்கள் சபையானது மிகுந்த உன்னத ஸ்திதியையடைந்தது என்று ஒருவிதத்தில் சொல்ல வேண்டும். இவ் வருஷத்திய மொத்த வரும்படி ரூ.52,607-8-7; மொத்தச் செலவு ரூ.51,364-16-3. இத் தொகைகள் பிறகு எப்பொழுதும் கிட்டியதில்லை. டிசம்பர் விடுமுறையில் நடித்த நாடகங்களில் மாத்திரம் ஏறக்குறைய 6,000 ரூபாய் வரும்படி பெற்றோம். இவ்வருஷம் எங்கள் சபை 49 நாடகங்கள் நடித்தது.