பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/623

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

608

நாடக மேடை நினைவுகள்


ஸ்ரீநிவாச ஐயங்கார், சேஷகிரி ஐயர் முதலியோர் பேசினர். அச்சமயம் நான் வாயற்றுப்போய் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, கண்ணீர் விட்டுக் கொண்டிருந்ததுதான் எனக்கு இப்பொழுது ஞாபகமிருக்கிறது. சபையோர் இவர் ஞாபகச்சின்னமாக இவரது உருவப் படமொன்றைச் சபையில் வைக்க வேண்டுமென்று தீர்மானித்ததுடன், இவரது ஞாபகார்த்தமாக ஏதாவது செய்ய ஒரு பண்டு ஏற்படுத்த வேண்டுமென்றும் தீர்மானித்தனர். அப்பண்டிற்கு அநேகர் பணம் அனுப்பினர். கொழும்பு முதலிய தூர தேசத்திலிருந்தும் சிலர் பணம் அனுப்பினர். இந்தப் பண்டில் தற்காலம் சுமார் 1,000 ரூபாய் சேர்ந்திருக்கிறது. எங்கள் சபையார் இதை எப்படி உபயோகிப்பது என்று இன்னும் தீர்மானம் செய்யவில்லை.

இவர் உயிர் துறந்ததைக் கேட்ட எனது நண்பர் டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச்சாரியார் “ரங்கவடிவேலுவுடன் சபையின் லட்சுமியும் போய்விட்டாள்” என்று தனது பிரிவாற்றாமையைக் கூறினார். அவ் வாக்குப் பலித்தது போல் இவ்வருஷம் முதல் எங்கள் சபை கொஞ்சம் க்ஷீணித்துக் கொண்டே வருகிறதென நான் கூற வேண்டும். இவ் வாக்கியம் ‘எங்கள் சபையில் இருக்கும் சில இளைய அங்கத்தினருக்கும் திருப்திகரமாயில்லாதிருக்கலாம்.

இவ்வருஷம் ஷேக்ஸ்பியர் கொண்டாட்டமும் கொண்டாடவில்லை; எங்கள் சபையின் வருஷாந்தர மஹோற்சவமும் கொண்டாடப்படவில்லை; வெளியூருக்கும் எங்கள் சபை போகவில்லை.

இவ்வருஷத்தின் ஆரம்பத்தில் ஜனவரி மாதத்தில் மூன்று தினங்களில் சாயங்காலம், விக்டோரியா ஹால் மேல் மாடியில், ஆங்கிலேயர் ஏற்படுத்தும் பேன்சி பேட் (Fancy Fete) மாதிரி சபையின் கட்டட பண்டிற்காக ஏற்படுத்தினேன். அதன் மூலமாகச் செலவு போக ரூபாய் 485-11-9 கட்டட பண்டிற்குச் சேர்ந்தேன். இதில் எனது நண்பரும் நானும் வேடங்கள் தரித்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.