பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/624

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

609


எனதாருயிர் நண்பர் மரித்தபொழுது, இனி நாம் நாடக மேடையேறுவதில்லை; நாடகங்களும் எழுதுவதில்லை என்று தீர்மானித்தேன். அச் சமயம் யாராவது இத் தீர்மானத்தினின்றும் நீ மாறப் போகிறாய் என்று என்னிடம் கூறியிருப்பார்களாயின், அவர்களுக்குப் பித்தம் பிடித்திருக்கிறதெனச் சொல்லியிருப்பேன்; இருந்தும் ஒரு வருஷத்திற்குள்ளாக அத் தீர்மானத்தினின்றும் தவறினேன்! கேவலம் மனிதனுடைய மனோதிடமும் தீர்மானங்களும் இத்தகைத்தே! இது நாம் பெருமை பாராட்ட வேண்டியதற்கு நேர்விரோதமான விஷயமாயிருந்தபோதிலும், என்னுடைய நாடக மேடை அனுபவங்கள் யாவற்றையும் ஒன்றுவிடாமலும், ஒளியாமலும் எழுத நிச்சயித்திருக்கிறபடியால், இதையும் இங்கு எழுதுகிறேன்.

எனதாருயிர் நண்பர் ஞாபகம் கொஞ்ச நேரமாவது வராமலிருக்கும்படி, இடைவிடாது புஸ்தகங்களைப் படித்துப் பார்த்தேன். எனது சிநேகிதர்களுடன் சீட்டு, பில்லியர்ட்ஸ் முதலியன ஆடிப் பார்த்தேன்; கடற்கரைக்குச் சென்று உலாவிப் பார்த்தேன். என் மனத்திற்குத் தோன்றிய யுக்திகளை யெல்லாம் செய்து பார்த்தேன். எதிலும் கொஞ்சமேனும் பயன்படாமற் போயிற்று. உடம்பின் வெளியில் தைத்த முள்ளை எப்படியாவது பிடுங்கி எறியலாம்; இருதயத்தில் தைத்த முள்ளை எப்படிப் பிடுங்கி எறிவது? சாரங்கதரனைப் பற்றிச் சுமந்திரன் கூறியதாக நான் எழுதியது போல, நான் எங்குச் சென்றாலும் யாரைப் பார்த்தாலும் அவரது ஞாபகமே எனக்கு வந்து கொண்டிருந்தது. என் தகப்பனார் மடிந்தகாலை அத்துயரத்தை மறந்திருக்க வேண்டி மனோஹரன் நாடகத்தை எழுதிப் பூர்த்தி செய்தது போல, இச்சமயம் ஏதாவது எழுதலாமா என்று யோசனை பிறந்தது. அதன்மீது மஹா பாரதத்திலிருந்து பீஷ்மரது சரித்திரத்தை நாடக ரூபமாக எழுதலாமா என்று யோசித்து அதைத் தொடங்கினேன். இவ்வருஷம். இச் சந்தர்ப்பத்தில் என் சிறு வயதில் நான் கேட்ட ஒரு சிறுகதை ஞாபகம் வருகிறது. தீராத வியாதியால் பீடிக்கப்பட்ட ஓர் அரசன், தன் குடும்ப வைத்தியர் கொடுத்த மாத்திரைகளினால் ஒன்றும் குணமாகவில்லை என்று அவர்மீது கடிந்துகொள்ள, அந்த வைத்தியர் யுக்தி