பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/625

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

610

நாடக மேடை நினைவுகள்


செய்து, குரங்கை நினைத்துக் கொள்ளாமல் இந்த மாத்திரையைப் புசித்தால் உங்களுக்கு உடம்பு சௌக்கியமாகும் என்று சொன்னாராம்; அதன் பிறகு அந்த அரசன் அம் மாத்திரையைப் புசிக்கக் கையிலெடுக்கும் போதெல்லாம், வைத்தியர் குரங்கை நினைத்துக் கொள்ளக்கூடாதென்று சொன்னாரல்லவா என்று ஞாபகம் வந்ததாம்! அம் மாதிரியாக இந்த பீஷ்ம சரித்திரத்தை நாடகமாக எழுத ஆரம்பிக்க உட்காரும் போதெல்லாம், எனதுயிர் நண்பர் ஞாபகம் வராமலிருக்கும்படி இதை எழுதத் தீர்மானித்தோமல்லவா என்கிற ஞாபகம் வரத் தலைப்பட்டது! அதன்பேரில் அவரைப்பற்றி மறக்க முயல்வதையும் விட்டேன்! அந் நாடகத்தில் முதல் அங்கம் முதற் காட்சி என்று ஆரம்பித்து சில வரிகள் எழுதி அப்படியே விட்டிருக்கும் காகிதம் என்னிடம் இன்னுமிருக்கிறது. இதை நான் எழுதி முடிப்பேனோ என்னவோ ஈசனுக்குத்தான் தெரியும். இதை வாசிக்கும் எனது நண்பர்கள் யாருக்காவது ஜோஸ்யம் தெரிந்தால், எனக்குத் தெரிவித்தால் நலமாயிருக்கும்.

பிறகு கொஞ்சகாலம் பொறுத்து கர்ணவதத்தை நாடகமாக எழுத ஆரம்பித்தேன். அதுவரையில் முப்பத்திரண்டு வருடங்களாக நாடகங்கள் எழுதிய கையானது சும்மா இருக்க முடியவில்லை! இதுதான் இனிமேல் நாடகங்கள் எழுதுவதில்லை என்று நான் தீர்மானித்த தீர்மானத்தின் முடிவாகும்! இனி நாடக மேடையேறுவதில்லை என்ற தீர்மானத்தின் முடிவைக் கூறுகிறேன்.

இவ் வருஷத்தின் ஆரம்பத்தில் சபையின் பொதுக் கூட்டத்தில் எனது நண்பராகிய துரைசாமி ஐயங்கார் தமிழ் கண்டக்டராக நியமிக்கப்பட்டார். அவர் ஏதோ காரணத்தினால், கிருஸ்த்துமஸ் விடுமுறையில் வழக்கப்படி பத்துப் பதினைந்து நாடகங்கள் ஆடவேண்டுமென்று தீர்மானித்து, ஹாலுக்குப் பணம் கட்டியபின், தமிழ் கண்டக்டர் வேலையை ராஜிநாமா கொடுத்தார். திடீரென்று அச் சமயம் வேறொருவரும் அந்த வேலையை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றார்கள். அச்சமயம் இத்தனை வருஷங்களாகப் பாடுபட்ட சபைக்கு நான் கைகொடுக்க வேண்டிய தாயிற்று. அதன்பேரில் நான் மறுபடியும் தமிழ் கண்டக்டராக இருக்க ஒப்புக்கொண்டேன். கண்டக்டராகத்தானே