பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/626

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

611


இருக்க ஒப்புக்கொண்டோம்; நாம் மேடைமீது நடிக்கப் போகிறதில்லையே என்று என் மனத்தைத் தேற்றிக் கொண்டேன். தமிழ் நாடகங்களுக்கெல்லாம் ஒத்திகை நடத்தினேன். அச்சமயம் அவற்றுள் முதல் தமிழ் நாடகமாகிய “பொன் விலங்குகள்” என்னும் எனது நாடகத்திற்கு ஒத்திகை நடத்திக் கொண்டு வந்தபொழுது, “பங்கஜவல்லி நாடகப் பாத்திரத்திற்கு, இந்தப் சந்தர்ப்பத்தில் ரங்கவடிவேலு இப்படி நடிப்பார்” என்று சொல்ல ஆரம்பித்தவன், என் பூர்வ ஞாபகமெல்லாம் வரவே வாய் குளறிக் கண்ணீர் ததும்ப, ஒத்திகையை நிறுத்த வேண்டியவனானேன். பிறகு என் மனத்தைத் தேற்றிக் கொண்டு ஒருவாறு ஒத்திகையை முடித்தேன். இச்சமயம் எங்கள் சபை ஆடிய மற்றொரு நாடகம் எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் இயற்றிய சபலை என்னும் நாடகம். இதில் நான் எப்பொழுதும் சுவர்ணகிரி ஜமீந்தார் வேஷம் தரிப்பது வழக்கம். இம்முறை அங்ஙனம் செய்ய முடியாதென்று அப் பாத்திரத்தை வேறொரு ஆக்டருக்குக் கொடுத்திருந்தேன். அவர் நாடக தினம் சமீபித்த பிறகு, ஏதோ காரணத்தினால் தன்னால் அதை ஆட முடியாதென்று திருப்பிக் கொடுத்துவிட்டார். வேறொரு ஆக்டரை நாடக தினத்துக்குள் தயார் செய்வது அசாத்தியமாயிருந்தது. அந்நாடகத்தையாவது விட வேண்டும், அல்லது நானாவது அந்த வேடம் தரிக்க வேண்டும் என்னும் தர்மசங்கடத்தில் நின்றேன்! இதுவரையில் நான் உழைத்து வந்த சபையின் நலத்தைக் கருதினவனாய், என் மனத்தை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு அந்தப் பாத்திரத்தை நான் மேடையின் பேரில் நடித்தேன். இப் பாத்திரம் ஒரே காட்சியில் வருவதாயினும் இதை நடிப்பது சுலபமல்ல; அந்த வேஷம் புனையும்பொழுது எனது மற்ற சிநேகிதர்கள் மத்தியில் ஏதோ பராக்காயிருந்துவிட்டேன்; பிறகு நான் வர வேண்டிய காட்சி ஆரம்பித்தவுடன் பக்கப் படுதாவின் அருகிலிருந்து மேடைக்கு நான் வரவேண்டிய காலத்தை எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்த பொழுது, என் இருதயத்திலிருந்த மாறாத வடு, “உதிரம் சொரிய ஆரம்பித்தது!” எனது உடம்பு நடுங்கியது, கால்கள் தள்ளாடின. பிறகு கண்மூடி, ஈசனைத் தியானித்தவனாய்,