பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/627

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

612

நாடக மேடை நினைவுகள்


மனத்தை தேற்றிக்கொண்டு, கண்ணீரை அடக்கி, இனி கால் வைப்பதில்லை என்று தீர்மானித்த அரங்கத்தின்மீது காலை வைத்து, என் பாகத்தை நடிக்க ஆரம்பித்தேன். நான் வாயைத் திறந்து முதலில் பேச வேண்டிய வார்த்தைகளைப் பேசுமுன் ஹாலில் வந்திருந்த ஏறக்குறைய அனைவரும் பெருங் கரகோஷம் செய்தனர். இனி சம்பந்தம் நாடக மேடை ஏறப் போகிறதில்லை என்று நினைத்திருந்த எனது நண்பர்கள், மறுபடியும் தெய்வாதீனத்தால் நாடக மேடை ஏறிவிட்டானே என்னும் சந்தோஷத்தினால், அவ்வாறு செய்தனர் என்று முகஸ்துதியால் என் ஆன்மாவை நானே திருப்தி செய்து கொண்டு அன்று நடித்தேன். என்ன காரணத்தினாலோ அன்று அவ்வேடத்தில் நான் நடித்தது போல் அப்பாத்திரத்தை அதற்கு முன்னும் நான் அவ்வளவு உருக்கமாக நடித்தததில்லை; பிறகும் நடித்ததில்லை. எனது பாகத்தை முடித்துக்கொண்டு அரங்கத்தை விட்டு நான் திரும்பிப் போகும்போதும், எங்கள் சபை அங்கத்தினரும் மற்றவரும் பெருங் கரகோஷம் செய்தனர். அம்மாதிரியான கரகோஷம் எங்கள் சபை அங்கத்தினரிடமிருந்து இதற்கு முன்பும் நான் பெற்றதில்லை; பிறகும் பெற்றதில்லை. அப்பொழுது என் மனத்தில் தோன்றிய எண்ணத்தை வெளிப்படையாய் இங்கு எழுதுகிறேன். “நம்முடைய இத்தனை நண்பர்கள், நாம் நடிப்பதை இன்னும் ஏதோ பார்க்க வேண்டுமென்று விரும்புகிறார்கள் போலிருக்கிறதே! நம்முடைய சுய இச்சையைக் கருதிச் சும்மா இருப்பதா? அல்லது நமக்கு எவ்வளவு மன வருத்தமிருப்பினும் இவர்கள் மனத்தைத் திருப்தி செய்வதா?” என்னும் கேள்வியேயாம்.

மறுதினம் சாயங்காலம் எங்கள் சபையோர் எனது பழைய நாடகமாகிய “லீலாவதி-சுலோசனா"வை நடத்தினார்கள். அதைப்பற்றிப் பிறகு எனது நண்பராகிய சுந்தரவரத அய்யங்கார், “எவ்வரி மான்ஸ் ரெவ்யு’ என்னும் பத்திரிகையில் ஆங்கிலத்தில் எழுதியதை இங்குத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன். இதுவரையில் இந் நாடகத்தில் சாதாரணமாக நடித்து வந்த இரண்டு முக்கிய ஆக்டர்கள், இன்று இல்லாமையானது குறிக்கப்பட்டது; அவர்களுள் ஒருவர் மீண்டும் திரும்பி வராத இடத்திற்குப் போய்ச் சேர்ந்துவிட்டார்! மற்றொருவர், தன் கடமைப்படி,