பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/629

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

614

நாடக மேடை நினைவுகள்


நண்பரான டி.வி. கோபாலசாமி முதலியாரும் காலமாயினார். பிறகு எனது நாடகமாகிய “பொன் விலங்குகள்” என்பது நடிக்கப்படும் பொழுதெல்லாம், இவர் ‘பிஸ்தாக் கொட்டைச் சாமி"யாராக நடித்ததைப் பார்த்தவர்கள், அவரைப்பற்றி நினையாத சமயம் கிடையாது. சாரங்கதர நாடகத்தில், இவர் மதுரகவியாக நடித்ததும் மிகவும் மெச்சத்தக்கதாயிருந்தது. இவர் நடுவயதிலேயே மரித்ததனால் எங்கள் சபை ஒரு ஹாஸ்யப் பாத்திரம் ஆடும் ஆக்டரையும் நான் எனது அத்யந்த நண்பர்களுள் ஒருவரையும் இழந்தோம்.

இவ் வருஷம் ஏப்ரல் மாதம் சென்னை கவர்ன்மென்டார் என்னை ஸ்மால் காஸ் கோர்ட் ஜட்ஜாக நியமித்தனர். எனது நண்பராகிய சர். சி. பி. ராமசாமி ஐயர் என்னை அழைத்து, இவ்வேலையை ஒப்புக் கொள்ளும்படி கேட்ட பொழுது, நான் அதற்கிசைந்ததற்கு முக்கியக் காரணம்; வக்கீலாக வேலை பார்த்துக் கொண்டிருந்தால், எந்நேரமும் என்னுடன் ஜுனியர் வக்கீலாகப் பல வருஷங்கள் கோர்ட்டில் பழகிய எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவின் ஞாபகத்தை மறக்க முடியாது; ஜட்ஜாகப் போனால், கொஞ்சம் மறந்திருக்க முடியுமென்பதேயாம். நான் இந்த வேலையை ஒப்புக்கொண்டபொழுது, அனேக நண்பர்கள், இனி நான் நாடக மேடையில் தோன்ற மாட்டேன் என்று உறுதியாய் நம்பினார்கள்; என்னிடம் தங்களுடைய அந்த அபிப்பிராயத்தையும் தெரிவித்தார்கள். அவர்களுக்கு நான் அடியிற் கண்டபடி பதில் சொன்னேன்: “இதற்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அப்படி ஏதாவது சம்பந்தமிருந்து இவ்விரண்டிலொன்றை நான் விட வேண்டியிருந்தால், நான் நாடக மேடையை விடமாட்டேன் என்று உறுதியாய் நம்புங்கள்” என்று கூறினேன். பிறகு ஒரு சமயம் என்னை சென்னையிலிருந்து வெளியூருக்கு டிஸ்டிரிக்ட் ஜட்ஜாக மாற்றுவதாக ஒரு வதந்தி பிறந்தபோது, ஒரு முக்கிய கவர்ன்மெண்ட உத்யோகஸ்தரிடம், அப்படிச் செய்வதனால், எனது ராஜிநாமாவைப் பெற்றுக்கொள்ள வேண்டி வரும் என்று தெரிவித்தது எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது. எனக்கு இந்த ஜட்ஜ் வேலை கிடைத்தபொழுது, என்னைப்