பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/630

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

615


பற்றிப் பத்திரிகைகளிலும் கூட்டங்களிலும், ஏதோ கொஞ்சம் புகழ்ந்து பேசியவர்களெல்லாம், நான் ஒரு நாடக ஆசிரியன் என்பதைப் பற்றிக் குறிப்பிடாதவர் இல்லை. இதுவே எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தது.

எங்கள் சபையார் இவ்வருஷம் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி எனக்கு ஒரு உபசார விருந்து செய்தனர். அன்று நடந்த மற்ற விஷயங்களைப் பற்றி எனக்கு இங்கு எழுத இஷ்டமில்லை. அப்பொழுது நடந்த ஒரு வேடிக்கையான சமாச்சாரத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன். விருந்தின் ஆரம்பத்தில், விக்டோரியா ஹாலில் வரவழைக்கப்பட்டவர்களெல்லாம் உட்கார்ந்த பிறகு, எங்கள் சபையின் வழக்கப்படி, ஸ்டேஜுக்குள்ளாக, விநாயகர் துதியை எனது ஆக்டர் நண்பர்கள் ஆரம்பித்தனர். உடனே ஹாலில் உட்கார்ந்திருந்த நான், ஸ்டேஜுக்கு உள்ளே விரைந்து சென்று கண்ணை மூடிக்கொண்டு, என் வழக்கம்போல் எனது நண்பர்களுடன் விநாயகர் துதி, சரஸ்வதி துதி பாடல்களைப் பாடினேன். பாடி முடிந்தவுடன், என் அருகிலிருந்த நண்பர்கள் சிரித்தபொழுதுதான், என்னைக் கௌரவப்படுத்த வேண்டி அந்தச் சபை கூட்டப்பட்டது என்பது எனக்கு ஞாபகம் வந்தது! வயது சென்ற ஒரு கோமுட்டிக்குக் கலியாண சடங்கிற்காக வாத்தியம் வாசிக்க ஆரம்பித்த பொழுது, அவன் “எனக்கா கலியாணம்?” என்று கேட்டதாக ஒரு வேடிக்கைக் கதையுண்டு; அக் கதையை நினைத்து நகைத்துக் கொண்டு வெட்கத்துடன் மறுபடி ஹாலில் போய், எனக்கு ஏற்படுத்தியிருந்த ஸ்தானத்தில் உட்கார்ந்தேன்! “பழக்கம் பொல்லாதது; பாறைமேற் கோழிசீர்க்கும்” என்னும் பழமொழிப்படி, அனேக வருடங்களாக அப் பாட்டுகளை எனது நண்பர்களுடன் கூடிச் சேர்ந்து பாடி வந்தபடியால், இப்பொழுதும் அப் பாட்டுகள் மேடையின் மீதோ அல்லது ஒத்திகை அறையிலோ ஆரம்பிக்கப்பட்டால், என்னையுமறியாத படி என்ன வேலையிலிருந்த போதிலும் அதை நிறுத்திவிட்டுப் பாடுமிடத்திற்கே போய் மற்றவர்களுடன் அப் பாட்டுகளைப் பாடுகிறேன். இதே மாதிரியாக எங்கள் சபையில் இந்த நாற்பத்தைந்து வருடங்களாகத் தமிழ் நாடகங்கள் ஆடும் பொழுதெல்லாம் நாடகம் முடிந்த