பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/632

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

617


பள்ளிக்கூடத்தில் ஒன்றாய்ப் படித்தோம். பிறகு லா காலேஜில் ஒன்றாய்ப் படித்தோம். லா பரீட்சையில் ஒன்றாய்த் தேறினோம். ஒரே வருஷத்தில் வக்கீல்களானோம். பிறகு ஒரே வருஷத்தில் மேற்சொன்னபடி ஜட்ஜுகளானோம்! இதைவிட இன்னும் விசேஷமான சமாச்சாரம் என்னவெனில், நாங்களிருவரும் ஒரே வருஷத்தில் ஜட்ஜ் வேலையினின்று விலகினோம்! 1928ஆம் வருஷம் எனக்கு 55 வயது பூர்த்தியானபடியால், கவர்ன்மெண்ட் சட்டப்படி விலகினேன். அவர் அதே வருடம் தனக்கு ஹைகோர்ட்டு ஜட்ஜ் வேலை இனி வேண்டாமென ராஜினாமா கொடுத்துவிட்டார்! அன்றியும் நாடக மேடையிலும் ஏறக்குறைய 45 வருடமாக ஒன்றாய் உழைத்து வருகிறோம். இவ்வாறு இவரது இணைபிரியா நட்பை இந்த 50 வருட காலமாக நான் பெற்றது என் முன்னோர்கள் செய்த பூஜா பலனேயென்று உறுதியாய் நம்புகிறேன். இவரை எனது நண்பனாகவும் குருவாகவும் ஆத்ம பந்துவாகவும் அடைந்து நான் பெற்ற பலனை என்னால் எடுத்துரைக்க இயலாது. அதைப்பற்றி நான் நினைக்கும்பொழுது மாணிக்கவாசக ஸ்வாமிகள் திருவாசகத்தில்,

“தந்ததுன்றன்னை கொண்ட தென்றன்னைச் சங்கராவார்
வார்கொலோ சதுரர்
அந்தமொன்றில்லா வானந்தம் பெற்றேனியாது நீபெற்ற
தென்றென் பால்?

என்று திருவாய் மலர்ந்தருளியது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

ஈசன் தன் கருணையினால் இவ்வுலகில் எனக்களித்த நண்பர்களுள் இவரை முதலாகவும், காலஞ்சென்ற ரங்கவடிவேலுவை இரண்டாவதாகவும், தற்காலம் என்னுடன் நாடக மேடையில் நடித்து வரும் கே. நாகரத்தினம் ஐயரை மூன்றாவதாகவும் மதிக்கிறேன்.

இனி இக் கிளைக் கதையை விட்டு மூலக் கதைக்குப் போகிறேன். இந்த 1924ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி எனது தமிழ் ஆசிரியராகக் கொள்ளும் ம-ள-ள-ஸ்ரீ, மஹாமஹோபாத்யாயர் வே. சாமிநாத ஐயர் அவர்கள் எங்கள் சபையில், “நாடகத் தமிழ்” என்பதைப்