பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/634

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

619


தமிழ் நாடகம் ஆடியிருக்கக் கூடுமல்லவா என்று வருத்தப்பட்டேன். “கிட்டாதாயின் வெட்டென மற” எனும் ஔவையாரின் வாக்கியம் ஞாபகம் வர, போனது போகட்டும், இப்பொழுது நமது சபையைக் கரையேற்றுவதெப்படி என்று பலவாறு யோசித்து, ஒரு வழியும் காணாதவனாய்க் கடைசியில் ஈசனைப் பிரார்த்தித்து, நீர் விட்டவழியாகிறது என்று உறங்கினேன். காலையில் எழுந்தவுடன், எனதாருயிர் நண்பர் போனவுடன், வேறொருவருடனும் நாடக மேடையில் நான் நடிப்பதில்லை என்ற தீர்மானித்தினின்றும் மாறித்தான் ஆகவேண்டும்; இவ்வாறு நாம் செய்வது என் சுய நன்மையைக் கருதிச் செய்யவில்லை; சபையின் பொது நன்மைக்காகத்தானே செய்கிறோம்; எனதுயிர் நண்பர், தானிருக்குமிடத்திலிருந்து இதைத் தவறாக எண்ணமாட்டார் என்று என் மனத்தில் தோன்றியது; உடனே இதுதான் ஜகதீசன் நமக்குக் காட்டிய வழி என்று உறுதியாய் நம்பினவனாய், அன்று சாயங்காலம் எங்கள் சபையின் நிர்வாக சபைக் கூட்டத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். அக்கூட்டத்தில் ராகவாச்சார்லு அவர்கள் வர முடியாதென்று தெரிவித்த விஷயத்தைக் காரியதரிசிகள் தெரிவிக்க, அப்படியாயின், வேறு தக்க நாடகம் நடிக்க நம்மால் ஏலாதென்று 23ஆம் தேதி நாடகத்தை நிறுத்தத்தான் வேண்டுமென்று தீர்மானிக்க ஆரம்பித்தார்கள்; அதன்பேரில் என் நாக் குழற காலையில் நான் செய்த தீர்மானத்தைத் தெரிவித்தேன். அதன்பேரில் அங்கிருந்த எனது நண்பர்களெல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டனரென்றே நான் உண்மையை எழுத வேண்டியவனாயிருக்கிறேன். அதன்பேரில் தமிழில் என்ன நாடகம் ஆடலாம் என்கிற பேச்சு வந்தவுடன், நமக்குப் பணம் அதிகமாய் வருகிற நாடகமாயிருக்க வேண்டும்; அன்றியும் கவர்னர் வரப்போகிறபடியால் அவர் எளிதில் அறியக்கூடிய நாடகமாயுமிருக்க வேண்டும், என்று கூறி, ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் பிரசித்தி பெற்ற நாடகமாகிய “ஹாம்லெட்” என்னும் நாடகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பாகிய “அமலாதித்யன்” என்பதை நடத்தலாமென்று தெரிவித்தேன். அதை எனது நண்பர்கள் குதூஹலத்துடன் ஒப்புக்கொண்டு, “அது சரிதான். இந்த