பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/635

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

620

நாடக மேடை நினைவுகள்


நாடகத்தில் யார் அபலை வேஷம் போட்டுக்கொள்வது?"என்று கேட்டனர். இந்த அபலை வேஷத்தில் எனதுயிர் நண்பர் மிகவும் சிறந்த பெயர் பெற்றிருந்ததைப்பற்றி முன்பே நான் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். ஆகவே காலையில் நான் இந் நாடகத்தை ஆட வேண்டுமென்கிற தீர்மானத்திற்கு வந்தவுடன், இதைப்பற்றி யோசித்து வைத்திருந்தேன். எங்கள் சபையில் ஸ்திரீ வேடம் தரிக்கும் ஒவ்வொரு ஆக்டரைப் பற்றியும் யோசித்துப் பார்த்து, இக்கஷ்டமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளத் தக்கவர்கள் யார் என்று ஆலோசித்து, கே. நாகரத்தினம் ஐயர்தான் இருப்பவர்களுக்குள் இதற்கு ஏற்றவர் என்கிற தீர்மானத்திற்கு வந்திருந்தேன். இவர் இதுவரையில் எங்கள் சபையில் ஸ்திரீ வேடம் பூண்டு நடித்தபொழுது, எல்லாப் புதிய ஆக்டர்களையும் கவனிப்பது போல் இவரையும் கவனித்திருந்தேன். ஸ்திரீ வேஷத்திற்குக் தக்க மிகுந்த ரூபலாவண்யமுடையவர்; சங்கீதத்திலும் நல்ல பயிற்சியுடையவர்; ராகமும் தாளமும் தவறாதபடி மனமுருகப் பாடுவார்; ஆக்டு செய்வதில் மாத்திரம் கொஞ்சம் போதாமலிருந்தது அச்சமயம்; அன்றியும் உரக்கப் பேசமாட்டார்; கடைசியிற் கண்ட இவ்விரண்டு குற்றங்களையும் நாம் சரிப்படுத்தி விடலாமென்கிற முடிவுக்கு வந்தேன். ஆகவே நிர்வாக சபை நண்பர்கள் யாருக்கு அபலை வேஷம் கொடுக்கப் போகிறாய் என்று என்னைக் கேட்டபோது ‘கே. நாகரத்தினம் ஐயருக்குக் கொடுக்கலா மென்றிருக்கிறேன், அவர் ஒப்புக்கொண்டால் என்று தெரிவித்தேன். அதன்பேரில் அப்பொழுது எங்கள் நிர்வாக சபையில் ஓர் அங்கத்தினராக இருந்த அவர் ‘அந்தப் பாத்திரத்தை எப்படி ஆக்டு செய்வது என்று நீங்கள் சொல்லிக் கொடுப்பதானால் எனக்கு ஆட்சேபணையில்லை’ யென்று ஒப்புக்கொண்டார். அதன்பேரில் எங்கள் நிர்வாக சபையார், 23ஆம் தேதி, அந்த நாடகத்தைப் போட வேண்டுமென்று தீர்மானித்து, கவர்னர் அவர்களுக்கும் தெரிவித்து எல்லா ஏற்பாடுகளும் செய்தனர். அந்நாடகத்தில் மற்ற ஆக்டர்களெல்லாம் பழைய ஆக்டர்கள். அவர்களுக்கு நான் புதிதாய் ஒன்றும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை யென்று தீர்மானித்து