பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/636

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

621


இடையிலிருந்த நான்கைந்து நாட்களும், கே. நாகரத்தினம் ஐயருக்கு அந்த அபலை வேடமாட ஒத்திகை செய்து வைத்தேன். முதலில் இதை, ரங்கவடிவேலுவைப் போல் அவ்வளவு விமரிசையாய் ஆக்டு செய்வாரோ என்னவோ என்று எனக்குச் சந்தேகமிருந்தபோதிலும், இரண்டு மூன்று ஒத்திகைகளுக்குப் பிறகு, சுமாராக நடிப்பார் என்கிற தீர்மானத்திற்கு வந்தேன். ஆனால் 23ஆம் தேதி இந்த நாடகமானது மேடையின் பேரில் நடிக்கப்பட்டபொழுது அதிக விமரிசையாய் நடித்து என்னையே ஆச்சரியப்படும்படி செய்தார் என்று நான் கூற வேண்டும். கவர்னர் அவர்கள் உட்பட வந்திருந்தவர்களெல்லாம், இவர் அபலையாக, பைத்தியக்காரிக் காட்சியில் நடித்ததை மிகவும் மெச்சினர். நான் சொல்லிக் கொடுத்ததைவிட மேலாகவும், ரங்கவடிவேலுவைவிட அதிக விமரிசையாகவும் இக்காட்சியில் நடித்தார். இதற்குமுன் எனதுயிர் நண்பர் இந்த அபலை வேடம் தரித்துப் பன்முறை நடித்ததைப் பார்த்திருந்த பல நண்பர்கள், இந்த வேடத்தில் ரங்கவடிவேலுவைவிட நாகரத்தினம் மிகவும் நன்றாக நடிக்கிறார் என்று பன்முறை கூறக் கேட்டிருக்கிறேன். என்னுடைய அபிப்பிராயமும் அதுவே. என்னுடன் ரங்கவடிவேலு இருபத்தெட்டு வருடங்களாக நடித்த வேடங்களிலெல்லாம், நாகரத்தினமய்யர் இந்த அபலை வேடத்தில் அவரைவிட மேலாக நடித்திருக்கிறார் என்று கூறுவது மிகையாகாது. அவர் இதற்குப் பிறகு இந்த எட்டு வருடங்களாக, ரங்கவடிவேலு நடித்த நாடகப் பாத்திரங்களுக்குள் பத்துப் பன்னிரண்டு, என்னுடன் ஆக்டு செய்திருக்கிறார் இதுவரையில்.

இந்த அமலாதித்யன் நாடக முடிவில் மாட்சிமை தங்கிய சென்னை கவர்னர் அவர்கள் நாடக மேடைக்குள் வந்து நாகரத்தினம் ஐயரையும் என்னையும் மிகவும் நன்றாக நடித்ததற்காகச் சற்றுப் புகழ்ந்து கொண்டாடினார். அவர் போன பிறகு, எங்கள் சபை பிரசிடென்டாகிய சேஷகிரி ஐயர் அவர்கள் ‘சம்பந்தம்! அம்மட்டும் இந்த நாடகத்தை சரியாக ஆடி முடித்தாயே! சந்தோஷம். எங்கு இடையில், ரங்கவடிவேலுவை நினைத்துக் கொண்டு, உன் பாகத்தைச் சரியாக ஆடாது விடுகிறாயோ என்று பயந்து கொண்டே இருந்தேன்’ என்று தெரிவித்தார்.