பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/639

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

624

நாடக மேடை நினைவுகள்


கோட்டு முதலியன அணிவித்து, ஒரு ஆக்டரை எனது நண்பர் வெங்கடாசல ஐயர், என்னைப்போலிருக்கும்படி முகத்தில் வர்ணம் முதலியன தீட்டி, மேடையின் மீது ஏற்றுவித்தார். இதைக் கண்டு சபையோர்களெல்லாம் மிகவும் சிரித்தபொழுது, அவர்களுள் ஒருவனாக உட்கார்ந்து நானும் சிரித்தேன். ஒரு நாடகாசிரியர் தன்னையே ஒரு நாடகப் பாத்திரமாக வைத்து ஒரு நாடகமெழுதியதாக இதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. அப்படியின்றி இதை வாசிக்கும் நண்பர்கள், அப்படிப்பட்ட உதாரணத்தை எனக்கெடுத்துக் கூறுவார்களாயின், என் அபிப்பிராயத்தைத் திருத்திக் கொள்ளத் தடையில்லை.

இவ்வருஷம் நடந்த மற்றொரு நிகழ்ச்சி என்னவெனில், ஸ்ரீ கிருஷ்ண விநோத சபையின் தலைவராகிய கன்னையா, எங்கள் சபையின் ஆதரவின்கீழ், ஒரு நாள் தனது “தசாவதாரம்” என்னும் நாடகத்தை நடத்தினார். இந் நாடகத்தைப் பற்றியும், கன்னையாவைப் பற்றியும் நாடகக் கம்பெனிகளைப் பற்றி என்னுடைய அபிப்பிராயத்தை எழுதும் பொழுது எழுதலாமென்றிருக்கிறேன்.

இவ் வருட ஆரம்பத்தில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியைப் பற்றி எழுத மறந்தேன்; அதாவது இவ் வருஷம் ஜனவரி மாதம் 31ஆம் தேதி, நேப்பியர் பார்க்கில், எங்கள் நாடக சாலையும் இருப்பிடமும் கட்ட அஸ்திவாரக் கல் எங்கள் சபையின் பிரசிடெண்டாகிய டி.வி. சேஷகிரி ஐயர் அவர்களால் போடப்பட்டதேயாம். இந்த வைபவமானது எல்லாம் மங்களமாய் முடிந்தபோதிலும், என் மனத்தில் மாத்திரம் என்னையுமறியாதபடி ஏதோ குறையாயிருந்தது. அக் கல்லானது சரியாக அமைக்கப்பட்ட பிறகு, எல்லோரும் தங்களிருப்பிடம் போகப் புறப்பட்டபொழுது, நானும் அதைப் பார்த்து விட்டுத் திரும்புங்கால், “இக் கட்டடம் முடிந்த பிறகு எத்தனை வருடங்களாவது பொறுத்து ஒரு நாள், ‘நெடு நிலை மாடம் கால்சாய்ந்துற்றுக் கழுதை மேய்பாழாயினுமாகும்’ என்கிற வாக்கியபடி, இது பாழாகி, இக் கல் பெயர்க்கப்பட்டு, அதனுள் நாம் இன்று வைத்த நவரத்தினங்கள், பொன் முதலிய நாணயங்கள் யார் கண்ணுக்காவது புலப்படுமல்லவா!” என்கிற யோசனையானது எக்காரணத்தினாலோ பிறந்தது அச்சமயம். சில