பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/643

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

628

நாடக மேடை நினைவுகள்


பற்றியோ, அதில் தான் நடிக்க மனமில்லாததாக எனக்குத் தெரிவித்தார். நான் என்ன சொல்லியும் கேட்கவில்லை. அதன்பேரில் அச்சிடுமுன் நடிக்க வேண்டும் என்னும் என் வழக்கத்தையும் ஆசையையும் விட்டேன். அதன் பிறகு நான் அதை 1918ஆம் வருடம் அச்சிட்டேன். மேற்கூறிய படி, அவர் உயிருடன் இருந்தவரையில் அவர் மனங் கோணாதபடி அதில் நடிக்கும்படி நான் நிர்ப்பந்திக்கவில்லை. பிறகு 1925இல் இதைப்பற்றி எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயருடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, அவர் தான் யசோதரையாக நடிக்க இஷ்டப்படுவதாகக் கூறினார். அதன்பேரில் எங்கள் நிர்வாக சபையில் இதை ஆடலாமெனப் பிரேரேபித்தேன். அச்சபையார் அப்படியே ஆட வேண்டுமெனத் தீர்மானித்தார்கள்; ஒன்றிரண்டு பெயர்கள் மாத்திரம் இந்நாடகம் மத விஷயமாயிருக்கிறதே யொழிய, நாடக மேடையில் ஜனங்களை ரமிக்கச் செய்யுமா என்று சந்தேகப்பட்டனர்; அவர்களுக்கு, “ஆடிப் பார்க்கலாம், பிறகு நீங்கள் கூறுவது சரியோ நான் கூறுவது சரியோ என்று தீர்மானிக்கலாம்” என்று பதில் உரைத்தேன். பிறகு 1925ஆம் வருஷம் ஒத்திகைகள் ஆரம்பித்து, டிசம்பர் விடுமுறை தவிர, சற்றேறக்குறைய ஆறு மாதங்கள் இடைவிடாது நடத்தினேன். என்னுடைய நண்பர்களாகிய ஆக்டர்களை நான் மிகவும் கசக்கியது, அலமாதித்யன் நாடகத்திற்குப் பிறகு இதில்தான். இதில் முக்கியமான கஷ்டம் ஒன்று என்னவென்றால், யசோதரை வேடம் பூண்ட நாகரத்தினத்திற்கு நர்த்தனம் செய்யக் கற்பிக்க வேண்டியிருந்தது. இன்னும் எட்டு ஸ்திரீ வேஷதாரிகளுக்கு, ஒன்றாய்ச் சேர்த்து, சித்தார்த்தன் (புத்தர்) முன்பாக நர்த்தனம் செய்யக் கற்பிக்க வேண்டியிருந்தது. இதற்காக அக்கலையில் வல்லவனாகிய ஓர் ஆசிரியனைக் கொண்டு, பல நாள் நர்த்தனம் செய்யக கற்பித்தேன். மூன்று மாதங்கள் இடைவிடாது ஒத்திகை செய்தானவுடன், நிர்வாக சபையார் 1925ஆம் வருஷம் டிசம்பர் மாதத்திலேயே இதை ஆட வேண்டுமென்று தீர்மானித்தனர். என் மனத்திற்குத் திருப்திகரமாயில்லை. இப்பொழுது வேண்டாம் என்று ஆட்சேபித்து அதை நிறுத்தி வைத்தேன். அச் சமயம் எனது நண்பர் திவான் பஹதூர் எஸ். பவாநந்தம் பிள்ளை அவர்கள் ஒரு முறை