பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/644

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

629


எனக்குக் கூறிய பழமொழி ஞாபகத்திற்கு வந்தது. அது, “அரைகுறையான வேலையை ஆசானுக்குக் காட்டலாகாது” என்பதேயாம்.

இச் சந்தர்ப்பத்தில்தான் நாகரத்தினம் ஐயர் நர்த்தனம் செய்யக் கற்றுக்கொண்டார். ரங்கவடிவேலுவுக்குப் பிறகு இவர்தான் எங்கள் சபையில் நர்த்தனம் செய்யக் கற்றுக் கொண்டது. இவர் இக் கலையைக் கற்கக் கொஞ்ச காலம் பிடித்தது; இவர் இதில் பூரண தேர்ச்சியடையும் வரையில், எனக்கு இந் நாடகத்தை ஆடுவதற்கிஷ்டமில்லை. புதிய நாடகங்களை சீக்கிரம் ஆட வேண்டுமென்று அவசரப்பட்டு ஒத்திகைகள் எல்லாம் நன்றாய் திருப்திகரமாக இல்லாத சமயத்தில், அவைகளை ஆடி சிலர் அவைகளைக் கெடுத்திருக்கின்றனர். ஒரு புதிய நாடகமானது முதன் முறை ஆடப்படும்பொழுது ஜனங்களுடைய மனத்தை ரமிக்கச் செய்யாவிட்டால், பிறகு அதைக் கொண்டு அவ்வாறு செய்வது மிகவும் கடினமாகும். இதை நாடகங்களை நடத்தும் கண்டக்டர்களும், புதிய நாடகங்களை எழுதும் நாடகக் கர்த்தாக்களும் கவனிப்பார்களாயின் நலமாயிருக்குமென எனக்குத் தோன்றுகிறது.

இந் நாடகத்திற்காக, நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டி வந்த இன்னொரு கஷ்டம் என்னவென்றால், இது சரித்திர சம்பந்தமான நாடகமாகையால், அக் காலத்திற்குத் தக்கபடி புதிய உடைகள், காட்சிகள் முதலியன சித்தம் செய்ய வேண்டி வந்தது. கௌதம புத்தர் இன்றைக்குச் சுமார் 2500 வருடங்களுக்கு முன் உயிர் வாழ்ந்ததாகச் சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் பெரும்பாலும் ஒப்புக் கொள்கின்றனர். அக் காலத்தில் ஸ்திரீ புருஷர்கள் எப்படி உடை தரித்தனர் அரண்மனைகள் முதலிய கட்டடங்கள் எப்படியிருந்தன; அக்காலத்து ஜனங்கள் உபயோகித்த பாத்திரங்கள், ஆயுதங்கள், ஆபரணங்கள் முதலியன எப்படியிருந்தன? இன்னும் இப்படிப்பட்ட அநேக விஷயங்களை ஆராய்ந் தறிந்து அதன்படி எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய வேண்டி வந்தது. இதற்காகப் புஸ்தகங்களைக் கொண்டு நான் அறிந்தது போதாமல், சென்னை மியூஸியம் சென்று, அங்குள்ள அமராவதி சிற்பங்களையெல்லாம் பல நாள் சிரமப்பட்டுப் பரிசோதித்து வந்தேன்; அன்றியும்,