பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/650

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

635


கடிதத்தில் கடைசியாக, “மற்றெல்லாம் மெச்சத்தக்கதா யிருந்தபோதிலும், ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் வெளிச்சம் ஏற்பாடு செய்தது மட்டும் எனக்குத் திருப்திகரமாயில்லை” என்று எங்கள் சபையில் அதுவரையிலிருந்த ஒரு முக்கியமான குறையை எடுத்துக் காட்டினார். இவ்விஷயம் மற்ற சபைகளுக்கும் நாடகக் கம்பெனிகளுக்கும் மிகவும் உபயோகப்படும் என்று எனக்குப் படுகிறபடியால், இதைப்பற்றிச் சற்று விவரமாக இங்கு எழுத அனுமதி கேட்கிறேன்.

எங்கள் சபை நாடகங்கள் ஆட ஆரம்பித்த பிறகு, அநேக வருஷங்கள் வரை எல்லாக் காட்சிகளுக்கும் ஒரே மாதிரியான வெளிச்சங்கள்தான் உபயோகித்து வந்தோம். தற்காலமும் அநேக சபைகளிலும், நாடகக் கம்பெனிகளிலும் அம்மாதிரி செய்து வருகிறார்கள். இதைப்பற்றிச் சற்று யோசித்துப் பார்த்தால், இது தவறு என்பது ஸ்பஷ்டமாகத் தெரியும். ஒரு காட்சி காலையிலிருக்கலாம்; மற்றொரு காட்சி நன்றாய் வெயிற்காயும் நடுப்பகலிலிருக்கலாம்; இன்னும் மற்றொரு காட்சி நடுநிசியிலிருக்கலாம்; இவைகளை நாடக மேடையின் மீது காட்டும் பொழுது, ஒரே வெளிச்சம் இருப்பது தவறல்லவா? அன்றியும் சில காட்சிகள் ஒரே காலத்தில் நடப்பனவாயினும், நடக்கும் இடம் வேறுபட்டிருக்கலாம். உதாரணமாக, காட்சி நடக்கும் காலம் நடுபகலாயிருக்கலாம்; ஆயினும் நடக்கும் இடம் வெவ்வேறாயிருக்கலாம்; ஒன்று வெட்டவெளியிலிருக்கலாம், மற்றொன்று இருண்ட குகையிலிருக்கலாம்; ஒன்று அரசனது கொலுவிலிருக்கலாம், மற்றொன்று அடர்ந்த காட்டிலிருக்கலாம்; இவைகளுக்கெல்லாம் ஒரே மாதிரியான வெளிச்சம் இருக்கச் செய்வது தவறல்லவா? ஆகவே ஒவ்வொரு காட்சிக்கும் வெளிச்சம் எப்படி இருக்க வேண்டுமென்று தீர்மானிக்கும்போது, முதலில் அது நடக்கும் காலத்தைக் கருதிப் பிறகு அது நடக்கும் இடத்தையும் கருதியே, இப்படிப்பட்ட வெளிச்சம் இருக்க வேண்டுமென ஏற்படுத்த வேண்டும். மற்ற விஷயங்களையும் கருத வேண்டும். இதற்கோர் உதாரணம் கூறுகிறேன்; ஒரு காட்சி பகல் பொழுதில் ஒரு தோட்டத்திலிருக்கலாம்; ஆயினும் அக்காட்சி நடக்கும் சமயத்தில் பெரும் மழை பொழிவதாக