பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/664

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

649


ஆக்டர்களையும் அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் போய் வரும்படி சொல்லி அனுப்பினேன். அவர்கள் போய்வந்து எனக்குக் குங்குமப் பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தனர். அதை அணிந்து, மானச பூஜையாக, எனது ஒன்பதாம் வயது முதல் செய்து வரும் வெள்ளிக்கிழமை பூஜையைச் செய்து முடித்து உறங்கினேன்.

மறுநாள் அதிகாலையில் விழித்ததும், எனக்கு ஜ்வரம் அதிகமாயிருப்பதைக் கண்டேன். உடனே வடிவேலு நாயக்கரை அழைத்து என் தேக ஸ்திதியைக் கூறி, “இன்று மனோஹரன் நாடகத்தை மாற்றி வேறு ஏதாவது நான் ஆடாத வேறொன்றை வைத்துக் கொள்ள முடியுமா?” என்று கேட்டேன். அவர் முகம் வாடி, “என்ன வாத்தியார், நோட்டீசுகளைக்கூட அனுப்பி விட்டேனே, ஆரம்பத் திலேயே தடங்கலானால் நான் என்ன செய்வது?” என்று துக்கப்பட்டார். அவர் புதுக்கோட்டையிலேயே நஷ்டப்பட்டதை அறிந்த நான், இங்கும் அவருக்கு நஷ்டம் வராத படி எப்படியாவது செய்யவேண்டுமென்று தீர்மானித்து, “என்னால் ஒன்றும் தடையில்லை. ஒரு வைத்தியர் யாரையாவது அழைத்துக் கொண்டு வா; அவர் இன்றிரவு என்னை மேடையின் பேரில் நடிக்கும்படியான சக்தி எனக்குக் கொடுப்பாராயின் நான் நடிக்க ஆட்சேபணையில்லை” என்று கூறினேன். அவர் உடனே “ஓடோடியும் போய்” ஒரு வைத்தியரை அழைத்து வந்தார். அவர் முழுப் பெயர் எனக்கு ஞாபகமில்லை. அவரை ‘மணி’ என்று மற்றவர்கள் அழைத்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. அந்த ‘மணி’ வைத்தியர் என்னைப் பரிசோதித்துப் பார்த்து, “இது ஒன்றும் கெட்ட ஜ்வரமல்ல; இதற்கு ஒரு பஸ்பம் அனுப்புகிறேன்; அதை உட்கொள்ளுங்கள், நீங்கள் இன்றிரவு நாடகமாடலாம்” என்று சொன்னார். அப் பொழுதுதான் என் மனம் கொஞ்சம் திருப்தி அடைந்தது; வடிவேலு நாயக்கர் முகமும் கொஞ்சம் மலர்ந்தது. அவர் கொடுத்த பஸ்பம், ஆங்கில வைத்திய மருந்தல்ல, ஹிந்துக்களுடைய ஆயுர்வேதத்திலடங்கிய ஏதோ ஒரு பஸ்பம். அது உடனே வெகு சீக்கிரத்தில் என் ஜ்வரத்தை இறக்கியது மன்றி, எனக்குக் கொஞ்சம் ஊக்கத்தையும் தந்தது. இதை இங்குச் சற்று விவரமாய் நான் எழுதுவதற்கு