பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/667

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



652

நாடக மேடை நினைவுகள்


சத்தியமூர்த்தி ஐயர் கேட்டபடி, நந்தன் சரித்திரத்தில் ஒரு பறையனாகவும் ஹரிச்சந்திர விலாசத்தில் பூதமாகவும் வந்தேன். இந்தச் சிறு விஷயத்தை இங்கு எனது நண்பர்களுக்குத் தெரிவித்ததற்கு ஒரு காரணமுண்டு. அநேக ஆக்டர்கள் ஒரு முறை ஏதாவது முக்கியப் பாகத்தை நடித்த பிறகு சிறு பாத்திரங்கள் எடுத்துக் கொள்வதில்லை யென்று தீர்மானித்து விடுகின்றனர். அவ்வாறு சிறு பாகங்களை எடுத்துக்கொள்வது தங்கள் கௌரவத்திற்குக் குறைவு என்று நினைக்கின்றனர். அன்றியும் அரசன் வேஷம், ஸ்ரீராமர் வேஷம், சுப்பிரமணியர் வேஷம் முதலிய பெரிய வேஷங்களைத் தரித்தபின், பறையனாகவும் தோட்டியாகவும் வருவதா என்று சங்கோசப்படுகின்றனர். இவ்வாறு எண்ணுவது முற்றிலும் தவறு. ஒரு நாடக சபையைச் சேர்ந்தால், எந்த வேஷத்தை எடுத்துக்கொள்ள வேண்டி வந்தபோதிலும், சந்தோஷமாய் எடுத்துக் கொள்வதே முறைமை என்று எனது இளைய நண்பர்களுக்கு அறிவிக்க வேண்டுமென்பது என் கடன் என்றெண்ணி, பல வருடங்களாக எங்கள் சபையில் கதா நாயகனாக நடித்து வந்த நான், சிறு அற்ப பாகங்களைக் கொடுத்த போதிலும், வேண்டாம் என்று மறுக்காது ஆடி வருகிறேன். இக் காரணம் பற்றியே நந்தனார் சரித்திரத்தில் ஒரு பறையனாகவும், ஹரிச்சந்திர விலாசத்தில் பூதமாகவும் வந்தேன். பறையனாக வேடம் தரிப்பது ஒரு விதத்தில் சுலபமென்றெண்ணலாம். பூதமாய் வருவதற்காக முகத்தில் கருப்பு, வெண்மை , சிகப்பு முதலிய வர்ணங்களை அலங்கோலமாய்ப் பூசிக்கொண்டு, கோரைப் பற்கள் இரண்டு வைத்துக்கொண்டு, விகாரமான உடை தரித்து வரவேண்டும். அதையும் மனங் கூசாது உற்சாகத்துடன் பூண்டேன். இந்தப் பூதமாக வந்தபொழுது நான் மேடையின் பேரில் பேச வேண்டிய வார்த்தை ஒன்றுதான் - பூ என்று உரக்கக் கூவ வேண்டியதே! அதையும் செய்தேன். நாடகங்களில் சிறு பாகங்களை எடுத்துக் கொள்வதைப்பற்றிச் சில வருடங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு சங்கதி ஞாபகத்திற்கு வருகிறது. அப்பொழுது காலவ ரிஷி ஆடப்பட்டது. அச்சமயம் வேறு ஆக்டர்களில்லாதபடியாலோ, அல்லது எங்கள் கண்டக்டர் என்னை எடுத்துக் கொள்ளும்படி கேட்டபடியாலோ, ஏதோ காரணத்தினால் திடீரென்று, இந் நாடகத்தில்