பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/672

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



657

நாடக மேடை நினைவுகள்


வேப்பிலை கட்டிக்கொண்டு வந்தபொழுது, சபையோரெல்லாம் கொல்லென நகைத்ததை நினைத்துக் கொண்டால், இப்பொழுதும் எனக்குச் சிரிப்பு வருகிறது. இங்கு நானும், சூத்திரதாரராக வந்த எனது நண்பர் ராகவாச்சாரி யாரும் பேசியதை ஒரு சிறு காட்சியாக எழுதி, “விடுதிப் புஷ்பங்கள்” என்று பெயரிட்டு நான் அச்சிடக் கோரியிருக்கும் புஸ்தகத்தில் பதியலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

இவ் வருஷம் எங்கள் சபையார் நடத்திய தெலுங்கு நாடகங்களில், நான் எழுதிய “காலவ ரிஷி”யின் தெலுங்கு மொழி பெயர்ப்பு ஒன்றாகும். என் அனுமதி பெற்று எனது நண்பர் டி. வெங்கடரமண ஐயர் அவர்கள் இதைத் தெலுங்கில் மொழி பெயர்த்தார். அவர் தெலுங்கில் எழுதியதென்னவோ நன்றாகத்தானிருந்தது. ஆயினும் இதைத் தெலுங்கில் ஆடியபொழுது தமிழ் காலவ ரிஷியைப்போல் அவ்வளவு நன்றாக நாடகம் சோபிக்கவில்லை என்று பலர் கூறினர். என்னுடைய அபிப்பிராய மும் அப்படியே. இந்த எனது காலவ ரிஷி நாடகத்தை எனது நண்பர்களிலொருவர் சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அது அச்சிடப்பட்டதோ என்னவோ எனக்கு ஞாபகமில்லை. காலவ ரிஷியைத் தெலுங்கில் மொழி பெயர்த்த எனது நண்பர் வெங்கடரமண ஐயர் எனது “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தையும் தெலுங்கில் மொழி பெயர்த்திருக்கின்றனர். எனது நாடகங்களை மொழி பெயர்ப்பதென்றால் எனது அனுமதியை முதலில் பெற வேண்டும் என்பதை அவ்வாறு செய்ய விரும்புவோர் கவனிப்பார்களாக.

இவ் வருஷம் சபை தொடங்கியது முதல் எண்ணூறு நாடகங்களாடி முடித்தோம். இதைச் சந்தோஷத்துடன் எங்கள் வருடாந்தர அறிக்கையில் குறித்தோம். அன்றியும் இவ் வருஷம் நாங்கள் ஆரம்பித்த புதிய வழக்கங்கள் இரண்டு; ஒன்று, “காளிதாஸன் தினம்” என்று ஒரு நாளைக் குறிப்பிட்டு, அத்தினம் சம்ஸ்கிருத்தில் அவரது நாடகங்களிலிருந்து இரண்டொரு காட்சிகள் நடத்தி, அம் மகாநாடகக் கவியைப்பற்றி ஒரு பிரசங்கம் செய்வித் தோம். ஷேக்ஸ்பியர் தினம் என்று எப்படிக் கொண்டாடினோமோ, அப்படியே இதையும் கொண்டாடினோம்; அன்றியும்