பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/673

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

658


இதேமாதிரியாக “கிருஷ்ணமாச்சார்லு தினம்” என்று ஆந்திர நாடகப் பிதாமகனாகிய அவரையும் கொண்டாடினோம். இத் தினங்களை மற்ற சபையாரும் கொண்டாடும்படியாக இதன் மூலமாக நான் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இவ் வருஷம் நான் புதிய நாடகம் ஒன்றும் எழுதவில்லை . ஆயினும் பல வருஷங்களுக்கு முன் நான் எழுதி முடித்து அச்சிட்டிருந்த ‘மகபதி’ என்னும் நாடகத்தை ஆட வேண்டுமென்று பிரயத்தனப்பட்டேன். இந்த மகபதி எனும் நாடகம் ஷேக்ஸ்பியர் மகாகவி ஆங்கிலத்தில் எழுதிய ‘மாக்பெத்’ என்னும் நாடகத்தின் தமிழ் அமைப்பாம்; இதை 1909ஆம்’ வருஷம் சென்னையில் மொழிபெயர்க்க ஆரம்பித்து, அவ்வருஷம் நான் கோடை விடுமுறையில் கொடைக்கானலுக்குப் போயிருந்தபொழுது அவ்விடம் பூர்த்தி செய்தேன். உடனே சீக்கிரத்தில் அச்சு வாகனத்தின் மீதும் ஏற்றினேன். ஆயினும் இம் மகபதி நாடகம் நாளது வரையில் ஆடப்படவில்லை . நான் எழுதி முடித்து ஆடப்படாத இரண்டு மூன்று நாடகங்களுக்குள் இது ஒன்றாகும். இது ஆடப்படாததற்கு அநேகர் காரணங்களுண்டு. முதற் காரணம் எனதுயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு இதில் கதாநாயகியாக ஆடப் பிரியப்படாத தேயாம். இது ஷேக்ஸ்பியர் எழுதிய மிகுந்த சோகரசம் அமைந்த நாடகங்களில் ஒன்றாகும்; அன்றியும் கதா நாயகியாகிய மகபதியின் மனைவி அவர் வர்ணித்துள்ள துர்க் குணங்களமைந்த மாதர்களில் ஒரு முக்கியமானவள். எனதுயிர் நண்பர் துர்க்குணமுள்ள எந்த ஸ்திரீ பாத்திரத்தை யும் நாடக மேடையில் நடிப்பதற்கு இஷ்டப்பட்டிலர்; ஆகவே, மகபதியின் மனைவியாக நடிப்பதற்கு அவர் இசையவில்லை. ஆகவே கதாநாயகனான மகபதியின் வேடம் நான் பூணுவதற்கில்லாமல் போயிற்று; அன்றியும் அக்கஷ்டமான பாத்திரத்தை நடிக்கக்கூடிய இரண்டொரு ஆக்டர்களை நான் கேட்டபொழுது, நீங்கள் முதன் முறை நாடக மேடையின்மீது நடித்துக் காட்டுங்கள்; பிறகு நாங்கள் ஆடுவதைப் பற்றி யோசிக்கிறோம் என்று சொல்லி விட்டார்கள். மேற்சொன்ன காரணங்களினால், எனதுயிர் நண்பர் ஜீவாந்தராயிருந்தவரையில், இந்நாடகமானது ஆடப்படவில்லை. அதன் பிறகு இவ்வருடம் (1927)