பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/674

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

659


‘கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது’ என்று பெரியார் கூறியபடி, காலஞ்சென்ற எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவுக்குப் பதிலாக பரமேஸ்வரன் தன் கருணையினாலெனக்குதவிய எனது புதிய நண்பராகிய கே. நாகரத்தினம் ஐயரை, இந்நாடகத்தில் நடிப்பதற்கு, ரங்கவடிவேலுக்கு இருந்தமாதிரி உனக்கேதாவது ஆட்சேபணை உண்டா என்று கேட்டபொழுது, தனக்கு அப்படிப்பட்ட ஆட்சேபணை, ஒன்றுமில்லை எனத் தெரிவிக்க, இந் நாடகத்தை எடுத்துக்கொண்டு ஒத்திகைகள் நடத்த ஆரம்பித்து, என் வழக்கப்படி இந்நாடகத்தைப் பற்றி ஆங்கிலத்திலுள்ள விமரிசைகள் எல்லாம் படித்து, நாகரத்தினம் ஐயருக்கு மகபதியின் மனைவியின் பாகத்தைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்த சில தினங்களுக் கெல்லாம், திடீரென்று அவரைச் சென்னையிலிருந்து மதுரையம்பதிக்கு மாற்றிவிட்டார்கள் துரைத்தனத்தார். அதன்பேரில் ஆடுவதற்காக ஒத்திகைகள் ஆரம்பிக்கப் பட்ட இந்நாடகம் தடையுற்றது; நாளது வரையில் ஆடச் சாத்தியமில்லாமலிருக்கிறது. “எண்ணித் துணிவது ஏழை மனிதன் செயல்; முடித்து வைப்பது முக்கண்ணன் செயல்” என்றபடி இந்நாடகத்தை நாங்கள் ஆடும் படி அவர் எப்பொழுது திருவுளம் இசைவாரோ அறிகிலேன். நான் நாடக மேடையை விட்டகலுமுன் ஒரு முறையாவது இதை ஆடும்படியான பாக்கியம் எனக்குக் கொடுப்பாரெனப் பிரார்த்திப்பது தவிர, வேறொன்றும் செய்ய வகை அறியேன்.

இம் மகபதி நாடகத்தின் ஒத்திகைகள் ஆரம்பிக்குமுன், எங்கள் சபையின் கௌரவ அங்கத்தினராயிருந்த ஆர்தர் டேவிஸ் என்பவரைக் கொண்டு ஷேக்ஸ்பியர் நாடகமாகிய மாக்பெத் என்பதை, ரெசிடேஷனாகக் (Recitation) கொடுக்கச் செய்தேன். எனது நண்பராகிய இந்த ஆர்தர் டேவிஸ் என்பவரைப் பற்றி இங்குச் சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். அவர், சில வருடங்களுக்கு முன்பாக ஹைகோர்ட் ஜட்ஜாயிருந்த சர் டேவிஸ் என்பவரின் குமாரர். ஹைகோர்ட்டில் டெபுடி ரிஜிஸ்டராராயிருந்து பிறகு சட்ட கலாசாலையில் பிரின்சிபாலாக இருந்து, 55 வயதானவுடன் பென்ஷன் பெற்றுக்கொண்டு சீமைக்குப் போய்விட்டார்.