பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/675

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



660

நாடக மேடை நினைவுகள்



இவர் சென்னையிலிருந்த சுமார் 30 வருடங்களும், ஷேக்ஸ்பியர் நாடகங்களை எந்த சபையாராவது ஆட வேண்டுமென்றால், அவர்களுக்குத் தன்னாலியன்ற உதவி செய்து வந்தார். அவர்களுக்கு நாடகத்தை முதலில் படித்துக் காட்டி, பிறகு அதிலுள்ள பாத்திரங்களையெல்லாம் இப்படி நடிக்க வேண்டுமன்று மிகவும் பிரயாசை எடுத்துக்கொண்டு சொல்லிக் கொடுத்து வந்தார். இம்மாதிரியாக எங்கள் சபைக்கும், ஹாம்லெட், மர்சென்ட் ஆப் வெனிஸ் முதலிய நாடகங்களைப் படித்துக் காட்டியிருக்கிறார். இந்த மாக்பெத் என்னும் நாடகத்தையும் வெகு விமரிசையாகப் படித்துக் காட்டினார். இவரைப் பற்றிய ஒரு விசேஷம் என்னவென்றால், மற்றவர்களுக்கு இவர் மேற்சொன்னபடியே ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் கற்பித்த - போதிலும், இவர் தானாக நாடக மேடையில் எப்பொழுதும் ஏறியதில்லை. இவர் தமிழ் அவ்வளவாகத் தெரியாதவராய் இருந்த போதிலும், எங்கள் சபையின் தமிழ் நாடகங்களுக்கும் அப்போதைக்கப்போது வந்து ஏதாவது சொல்லிக் கொடுத்துக்கொண்டு வந்தார். இவர் எங்கள் சபைக்குச் செய்து வந்த உதவிக்கெல்லாம் இதன் மூலமாக, அவருக்கு என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன். இவரிடம் இருந்த ஒரு முக்கியமான குணத்தைப் பற்றி இங்கு எழுத விரும்புகிறேன். நான் அறிந்த பல ஆங்கிலேயர்கள் தாங்கள் ராஜாங்கம் செலுத்தும் ஆங்கில ஜாதியாரைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் இந்தியர்கள், ஆளப்பட்டவர்கள்; என்னும் வித்தியாசம் பாராட்டுவதைப் பன்முறை பார்த்திருக்கிறேன். அக் குற்றம் இவரிடம் ஒரு சிறிதும் இல்லை . இந்த நற்குணத்தை மற்ற ஆங்கிலேயர்களும் மேற்கொண்டு நடப்பார்களாயின்; இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் உள்ள விவாதங்கள் ஏறக்குறைய எல்லாம் நீங்கி, இரு ஜாதியாரும் ஒருமைப்பட்டு வாழ மார்க்கமுண்டாகும் என்று எண்ணுகிறேன்.

இவ் வருஷம் எங்கள் சபைக்கும், சவுத் இண்டியன் அத்லெடிக் அசோசியேஷனுக்கும், பிரசிடெண்டாகவிருந்த சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் இவ்விரண்டு. சபைகளையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டுமென்று பிரயத்தனப்பட்டுப் பார்த்தார்; அப்பிரயத்தனம் சில காரணங்களால் பயன் பெறாமற் போயிற்று.