பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/677

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



662

நாடக மேடை நினைவுகள்


ஒருபுறம் இருக்கட்டும்; ஒரு சபையின் கண்டக்டராயிருப்பவன் அச் சபையிலுள்ள எல்லா ஆக்டர்களையும் திருப்தி செய்வது அசாத்தியம் என்பது என்னுடைய கொள்கை. இதற்கு முக்கியக் காரணம், ஒவ்வொரு சபையிலும், ஆக்டர் என்று மேடையின் பேரில் ஏறும் ஒவ்வொருவனும், ஒவ்வொரு நாடகத்திலும் தனக்கு முக்கியமான பாகம் வேண்டுமென்று இச்சிப்பதுதான் என்று நான் எண்ணுகிறேன். ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும்தான் பாகம் அதிகமாயிருக்கும்; அன்றியும் சில பாத்திரங்கள்தான் முக்கியமான வையாயிருக்கும். அப்படியிருக்க, ஒவ்வொரு நாடகத்திலும், எல்லா ஆக்டர்களுக்கும் கதாநாயகன் பாகமும், கதாநாயகி பாகமும் அல்லது மற்ற முக்கியப் பாத்திரங்களில் ஒன்றும் கொடுப்பதென்றால், யாருக்கும் சாத்தியமான காரியமல்ல. அதுவும் நான் கண்டக்டராயிருந்த வருஷங்களெல்லாம் எனதுயிர் நண்பருக்காகவும் எனக்காகவும் நான் பல நாடகங்களை எழுதி வந்தபொழுது, அவைகளில் முக்கியப் பாத்திரங்களை நாங்களிருவரும் எடுத்துக்கொண்டு வந்தபடியால், மற்ற ஆக்டர்களுக்கு முக்கியப் பாகங்கள் கிடைப்பது இன்னும் கஷ்டமாயிருந்தது; இதனுடன் நாங்களிருவரும் மற்றவர்களுடன் ஆக்டு செய்யாததால் அநேகருக்கு மன வருத்தம் இருந்தது; அப்படியிருந்தது தவறென்று நான் கூறவில்லை . அது மிகவும் சகஜம்தான். இதைப்பற்றி நான் எடுத்துக் கூற விரும்புவ தென்னவென்றால், மற்ற ஆக்டர் கள் நாங்களிருவரும் அவர்களுடன் ஆக்டு செய்யாததற்குக் காரணத்தை அறிந்திருப்பார்களாயின், எங்கள் மீது அவ்வளவு வருத்தப்பட மாட்டார்கள் என்பதேயாம். ஆக்டர்களுக்குண்டான இக்குறையைத் தீர்க்கும் பொருட்டு, எங்கள் சபையின் கமிட்டியாரும் பொதுக் கூட்டத்தாரும் அநேக யுக்திகள் செய்து பார்த்தனர். அவற்றுள் ஒன்று என்னவென்றால், இன்னின்ன நாடகங்கள் போட வேண்டும் என்பதையும், அவற்றுள் ஒவ்வொன்றிலும் இன்னின்ன பாத்திரங்கள் இன்னின்னாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க, ஒரு ஸ்பெஷல் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது; இதைக் கொஞ்ச காலம் பார்த்து, இதனாலும் அக் குறை தீராதபடியால், தமிழ், தெலுங்கு