பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/679

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



664

நாடக மேடை நினைவுகள்


கேட்கலாம். அதற்குப் பதில் அடியில் வருமாறு: நான் ஜட்ஜ் வேலையிலிருந்து விலகியவுடன் எனது நண்பர்களிற் பலரும் வர்த்தமானப் பத்திரிகைகளின் ரிபோர்ட்டர்கள் சிலரும், இனிமேல் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று என்னைக் கேட்டார்கள். அப்பொழுது அவர்களுக்கெல்லாம், இனிமேல் நான் வக்கீலாக வேலை பார்க்கப் போகிறதில்லை; இனி ஈசன் எனக்களித்திருக்கும் ஓய்வுக் காலத்தை யெல்லாம் தமிழ் நாடகங்கள் எழுதுவதில் - அதிலும் தற்காலத்திய நாகரிகத்தைப் பற்றிய சோஷல் நாடகங்கள் எழுதுவதில் - கழிக்கப் போகிறேன் என்று விடை கூறினேன். நான் இருபத்தைந்து வருடங்கள் வக்கீலாக இருந்த பொழுது மனிதர்களுடைய குணாதிசயங்களைப் பற்றியும் நடவடிக்கைகளைப் பற்றியும் பல விஷயங்கள் அறிய ஹேதுவாயிருந்த போதிலும், ஜட்ஜாக இருந்த நான்கு வருடங்களில் இதற்குமுன் நான் அறியாத பல விஷயங்களைக் கற்றேன் என்றே நான் சொல்ல வேண்டும். இவையெல்லாம் தமிழ் நாடகங்கள் எழுது வதற்கு எனக்கு மிகவும் பயன்பட்டன என்பதற்குத் தடையில்லை. ஒரு நாடகாசிரியன் கற்க வேண்டிய சமாச்சாரங்கள் இந்த வேலையில்தான் உண்டு, இந்த வேலையில் இல்லையென்று சொல்ல இடமே கிடையாது. அன்றியும் இவ்வுண்மை நாடக மேடையில் ஆட விரும்புபவனுக்கு மிகவும் பொருத்தமானது என்பதற்கு ஐயமில்லை.

இனி மேற்சொன்ன தீர்மானத்தின்படி, நான் எழுதிய நாடகங்களைப் பற்றிச் சற்று விவரமாய் எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.

இவ்வருஷம் நான் ஆரம்பித்து எழுதி முடித்து, உடனே எங்கள் சபை ஆடிய நாடகம் “தாசிப்பெண்” என்பதாம். இந் நாடகத்தின் கதை என் மனத்தினால் நிர்மாணம் செய்யப்பட்டதேயாம். முக்கியப் பாத்திரங்களெல்லாம் என் மனோ சிருஷ்டியேயன்றி, நான் அறிந்த ஒருவரையும் குறிப்பிட்டதன்று. சில சிறு நாடகப் பாத்திரங்கள் மாத்திரம், எனது நண்பர்களுட் சிலருடைய குணாதிசயங்களை முன்னிட்டு எழுதியதாம். அப்படிச் செய்யும் பொழுதெல்லாம், அவர்களுடைய உத்தரவைப் பெற்றே அவ்வாறு செய்வது என் வழக்கம். உதாரணமாக, இத் தாசிப்பெண்