பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/680

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

665


என்னும் நாடகத்தில் வரும் “டப்பூஸ் நாயுடு” என்னும் பாத்திரமானது, காபி, தேத்தண்ணீர், சோடா முதலிய பானங்களை அபரிமிதமாய்ச் சாப்பிடும் எங்கள் சபையின் அங்கத்தினர் ஒருவரை முன்னிட்டு எழுதியதாகும்; இவ்வாறு செய்யப் போகிறேன் உங்கள் உத்தரவைப் பெற்றே பிறகு எழுதியுள்ளேன். இந்நாடகத்தை எழுதி முடிப்பதற்கு இரண்டு மூன்று மாதங்கள் பிடித்தன. என் வழக்கப்படி, நாடகக் கதையின் கோர்வையை முன்பு தீர்மானித்து, பிறகு காட்சிகளாகப் பிரித்துக் குறிப்பிட்டுக்கொண்டு எழுதி வரும் தருவாயில், ஏதாவது ஒரு கட்டம் வந்துவிடும், அதற்கப் புறம் எப்படி எழுதுவது என்று யோசிக்க வேண்டியவனாய் சரியான மார்க்கம் என் புத்திக்குத் தோன்றும் வரையில், ஒரு நாளோ இரண்டு நாளோ, ஒரு வாரமோ பிடித்தாலும், அது வரையில் ஒரு வார்த்தையும் எழுத மாட்டேன். இப்படிப்பட்ட இடைக்காலங்களில், சும்மா இருக்கப் பொறுக்காமல், எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காருடைய ஆங்கில நாடிகைகளை (சிறு நாடகம்) அவரது உத்தரவைப் பெற்று தமிழில் மொழி பெயர்த்து வந்தேன். இவ்வாறு ஒரு வருஷத்திற்குள்ளர்க “மனைவியால் மீண்டவன்”, “விச்சுவின் மனைவி”, “நோக்கத்தின் குறிப்பு”, “விபரீதமான முடிவு”, “இடைச்சுவர் இரு புறமும்”, “இரண்டு ஆத்மாக்கள்”, “என்ன நேர்ந்திடினும்”, “சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து”, “சுல்தான் பேட்டை சப்-அசிஸ்டென்ட் மாஜிஸ்ட்ரேட்”ஆகிய ஒன்பது நாடகங்களையும் மொழிபெயர்த்தேன். இவைகளைப் பற்றிப் பிறகு கொஞ்சம் எழுத வேண்டி வரும்.

இவைகளையெல்லாம் எழுதும் பொழுது ஈசன் அருளிய என் வாழ்நாட்களை நான் எவ்வாறு கழித்து வருகிறேன் என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிய விரும்புவார்களென்று எண்ணினவனாய், அதை எழுதுகிறேன். 1928ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் முதல் தேதி முதல், இதுவரையில், நான் சென்னையிலிருக்கும் போதெல்லாம் என் நாட்களைக் கழிக்கும் விதம் இதாகும்.

அதிகாலையில் எழுந்திருப்பது என்பது என் ஜன்மத்தில் கிடையாது; கும்பகர்ணனை ஸ்ரீராமபிரான் கொல்வதற்குள் அவரிடமிருந்து அவன், தனக்குப் பிரதிநிதியாக ஒவ்வொரு