பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/681

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



666

நாடக மேடை நினைவுகள்


யுகத்திலும் ஒருவனிருக்கும்படி வரம் வேண்டியிருக்க வேண்டும்; அவ்வரத்தின்படி கலியுகத்தில் என்னை அக் கும்பகர்ணனுக்குப் பிரதிநிதியாகப் பகவான் ஏற்படுத்தினார் போலும். பால்யத்தில் பரீட்சைகளுக்குப் போகும் போதும் காலையில் எழுந்திருந்து படித்தவனன்று நான். காலையில் சாதாரணமாக ஏழு மணிக்குத்தான் எழுந்திருப்பது என் வழக்கம். எழுந்தவுடன் நான் வழிபடு கடவுளாகிய என் தாய் தந்தையாரைத் தொழுதுவிட்டு, தேகப்பயிற்சி சிறிது செய்து, என் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு எட்டு மணிக்கு என் மேஜையருகில் உட்காருவேன்; கால்மணி சாவகாசம் ஏதாவது சம்ஸ்கிருதம் படித்துவிட்டு பதினோரு மணிவரையில் தமிழ் நாடகங்கள் எழுதுவதில் காலம் கழிப்பேன். பதினோரு மணிக்கு 15 நிமிஷம் முன்பாக சன்பாத் (Sun bath) எடுத்துக்கொண்டு பிறகு 15 நிமிஷம் ஷாம்பு (shampoo) எடுத்துக் கொண்டு, ஸ்நாநம் செய்து பகல் பூஜையை முடித்து, உணவுகொள்ள, சரியாகப் பன்னிரண்டாகும். அதன் பேரில் கால் மணி சாவகாசம் ஏதாவது வர்த்தமானப் பத்திரிகை வாசித்து விட்டு, எனது நாடக சம்பந்தமாக அவற்றை ஆட விரும்பும் சபைகளுக்கு ஏதாவது காகிதங்கள் எழுத வேண்டியிருந்தால் அவற்றை எழுதி விட்டு, இரண்டு மணி வரையில் நான் அச்சிட வேண்டிய நாடகங்களை அச்சாபீசுக்கு அனுப்பப் பிழைகள் திருத்துவேன். இரண்டு மணிக்கு வண்டியேறி, என் நாடகங்களை அச்சிடும் இரண்டு அச்சாபீசுகளுக்கும் போய் புரூப்புகளை (proof) கொடுத்துவிட்டு, ஏதாவது சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிவிட்டு, சுகுண விலாச சபைக்குப் போய்ச் சேர்வேன். அங்கு சபைக் காரியங்களை ஏதாவது பார்ப்பதிலோ அல்லது ஒன்றும் இல்லாவிட்டால், ஆங்கிலப் பத்திரிகைகளைப் படிப்பதிலோ, சாயங்காலம் வரையில் போக்கி, வெயில் சற்று தாழ்ந்தவுடன் பீபில்ஸ் பார்க்கில் அரைமணி சாவகாசம் உலாவுவேன். இச்சமயம்தான் ஏதாவது புதிய நாடகங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருந்தால் யோசிப்பேன். திரும்பி வந்ததும் எனது சபை நண்பர்களுடன் பேசியாவது சீட்டாடியாவது (பணமில்லாமல்! - ஏனெனில் எங்கள் சபையில் துட்டு வைத்து சீட்டாடக் கூடாது என்று ஒரு நிபந்தனை ஆரம்ப முதல்