பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/682

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

667


உண்டு) எட்டுமணி வரையில் காலம் கழிப்பேன். பிறகு வீட்டிற்குத் திரும்பி பதினைந்து நிமிஷம் தேகப் பயிற்சி செய்த பிறகு கைகால்களை சுத்தி செய்து ராத்திரி பூஜையை முடித்து, சாதாரணமாக ஒன்பது மணிக்கெல்லாம் நித்திரைக்குப் போவேன். மேற்கூறியதனால், பொழுது போவது கஷ்டமாயிருக்கிறதெனும் கஷ்டம் எனக்கில்லை என்பதை என் நண்பர்கள் அறியலாம். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரத்துடன் இன்னும் ஐந்தாறு மணிகள் இருப்பினும், அவைகளிலும் செய்ய ஏதாவது வேலை எனக்குக் கிடைக்குமென நம்புகிறேன். செய்வதற்கொன்று மில்லையே என்கிற கவலை எனக்கு எப்பொழுதும் கிடையாது; நாம் செய்ய வேண்டுமெனத் தீர்மானித்திருக்கும் காரியங்களையெல்லாம் கடவுள் கிருபையால், நமக்கிருக்கும் ஆயுளுக்குள் செய்து முடிப்போமோ என்னும் கவலைதான் உண்டு. எனது நண்பர்களில் அநேகர், இப்பொழுது எப்படி உன் காலத்தைக் கழிக்கிறாய் என்று கேட்டதனால் இதைப்பற்றி இங்கு, சற்று விரிவாய் எழுதலானேன். அன்றியும் இன்னொரு காரணமுண்டு. அநேகர் தங்கள் வேலையிலிருந்து பென்ஷன் (Pension) வாங்கிக் கொண்ட பிறகு தாங்கள் செய்வதற்கொன்றுமின்றி, காலத்தைப் போக்க வகையறி யாராய்க் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நான் நாடகமெழுதுகிறது என்கிறதை ஒரு வேலையாக வைத்துக் கொண்டிருப்பது போல், அவர்களும் தங்கள் மனதுக்கிசைந்த யாதொரு வேலையை மேற்கொள்வார்களானால், அவர்களுக்கு அதனால் பெரும் பலன் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலத்தில் ஹாபி (Hobby) என்று ஒரு பதம் உண்டு . இதற்குச் சரியான தமிழ்ப் பதம் எனக்குக் கிடைக்கவில்லை ; ஒருவன் மனத்திற்கிசைந்த தொழில் என்று அதற்கு ஒருவாறு அர்த்தம் செய்யலாம். ஒவ்வொரு மனிதனும், தன் சிறு வயதிலேயே, தன் ஜீவனாதாரமான தொழிலைத் தவிர, வேறு ஏதாவது ஒரு வினோதமான வேலையைக் கற்று வருவானாயின், அவன் வயோதிகத்தில் அது மிகவும் பயன்படும் என்பதற்குத் தடையில்லை. நான் அறிந்தவர்களுள் அநேகர் பென்ஷன் வாங்கிக் கொண்டபிறகு, வேறொன்றும் செய்வதற்