பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/683

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



668

நாடக மேடை நினைவுகள்


கில்லாமல், கிளப்புக்குப் போய்ச் சீட்டாடிக் காலம் கழித்துத் தமது ஆயுளைக் குறுக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் நாடகங்கள் எழுதுதலாகிய என் ஹாபி (Hobby) என் பொழுதைப் போக்குவதற்கு அனுகுணமாயிருப்பது மன்றி, எனக்கு வருவாயையும் தருகிறது; தமிழ் பாஷைக்கு நான் செலுத்த வேண்டிய கடமையையும் செலுத்த மார்க்கமாகிறது.

இவ் வருஷம் நான் எழுதி முடித்த “தாசிப் பெண்” என்னும் நாடகம், இவ்வருடமே எங்கள் சபையில் ஆடப்பட்டது. அதில் தற்காலம் எனது அத்யந்த நண்பராயிருக்கும் கே. நாகரத்தினம் ஐயர், தாசிப் பெண்ணாக ரூபாவதி வேடம் பூண்டனர்; நான் சுப்பிரமணிய ஐயர் வேடம் பூண்டேன். இந்நாடகத்தில் தாசிப் பெண்ணாகிய ரூபாவதி பாடும் இரண்டு பாட்டுகள் தவிர வேறு சங்கீதமே கிடையாது. ஆயினும் இந் நாடகம் மிகவும் நன்றாயிருந்ததென மெச்சப்பட்டதுமன்றி, நல்ல வரும்படியும் வந்தது எங்கள் சபைக்கு. முதன் முறை ஆடியபொழுது சுமார் 400 ரூபாய் வரும்படி வந்தது. இதை நான் முக்கியமாக எடுத்து எழுதுவதற்குக் காரணம், அநேகர் புராணக் கதைகளாயிருந்தால்தான் வசூலாகும், சங்கீதம் அதிகமாயிருந்தால் தான் வசூலாகும் என்று நினைக்கிறார்களே, அது முற்றிலும் தவறு என்று நிரூபிப்பதற்கேயாம். இதை மறுமுறை எங்கள் சபையில் போட வேண்டுமென்று பிரேரேபிக்கப்பட்ட பொழுது, மேற் சொன்னபடி எண்ணங் கொண்ட எனது நண்பர்களில் ஒருவர், இந்நாடகத்தில் வசூலாகாதென்று போட்டி போட்டார்; அம்முறை டிசம்பர் மாதத்தில் நாங்கள் இதை ஆடியபொழுது, புராணக் கதையாயும், சங்கீதம் நிரம்பியுள்ளதுமான நந்தனார் சரித்திரத்தைவிட, இந் நாடகத்திற்கு வரும்படி அதிகமாய் வந்ததைக் கண்டு, மௌனமாய் இருந்துவிட்டார்.

இந் நாடகமானது, எங்கள் சபை இதை ஆடுமுன், நான் தற்காலம் வெளியூர் அங்கத்தினனாக (Mofussil member) இருக்கும் மதுரை டிராமாடிக் கிளப்பாரால் இவ் வருஷம் ஆடப்பட்டது. இந்நாடகத்தை, என் சொந்தக் கற்பனையில் நான் எழுதியவற்றுள், ஒரு முக்கியமானதாகக் கொள்கிறேன்.