பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/686

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

671


சபையின் முக்கிய அங்கத்தினர் ஆக்டர்கள் முதலியோருடைய உருவப் படங்களையும் அச்சிட்டோம். இப் புஸ்தகத்திற்கு எங்கள் சபையின் சுருக்கமான சரித்திர மொன்றை முகவுரையாக எழுதியுள்ளேன். இப் புஸ்தகம் கானரா அச்சு இயந்திர சாலையில் கே.எ. ஹெப்பார் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது.

30ஆவது அத்தியாயம்

று வருஷமாகிய 1929ஆம் ஆண்டில் நான் எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கத்தக்க விஷயங்கள் அதிகமில்லை . இவ் வருடம், சுமார் இருபத்தைந்து வருடங்களாக எங்கள் சபையின் குமாஸ்தாவாக இருந்த கிருஷ்ணசாமி ஐயர் நடுவயதிலேயே காலவியோகமானான். இவன் எங்கள் சபைக்கு மனமார உழைத்தவர்களுள் ஒரு முக்கியமானவன்; சபையின் பணம் முதலியவற்றை மிகவும் பொறுப்பாகப் பாதுகாத்தவன்; சபைக்காக இரவும் பகலும் பாடுபட்டவன்; இதற்கு நன்றியறிதலாக எங்கள் சபையார், இவனது மனைவிக்கு நாளது வரையில் மாசம் ஒன்றுக்கு 7 ரூபாய் பென்ஷனாகக் கொடுத்து வருகிறார்கள். இதற்கு முன்பாக இவனது குமாரத்தியின் கலியாண செலவுக்காக, ஒரு தமிழ் நாடகமாடி சுமார் 700 ரூபாய் வரையில் உதவினோம். எங்கள் சபை இதுவரையில் செய்த தர்மத்தில் இது ஒரு முக்கியமானதாம்.

அன்றியும் இவ்வருஷம், பல ஆண்டுகளாக எங்கள் சபையில் மிருதங்கம் அல்லது தபேலா வாசித்துக் கொண்டிருந்த வெங்கடேஸ்வரலு என்பவனும் காலமானான். இவனிடமிருந்த மெச்சத்தக்க குணம் என்னவென்றால், ஒரு நாடகத்தில் ஒரு ஆக்டர் ஒரு பாட்டைப் பாடினால் பிறகு எத்தனை வருடங் கழித்தாலும், இன்ன ஆட்டத்தில் நீங்கள் இன்ன மெட்டில் இந்தத் தாளத்தில் இந்தப் பாட்டைப் பாடினீர்கள் என்று மறவாது சொல்வான்! இது ஆக்டர்களுக்கும் கண்டக்டர்களுக்கும் மிகவும் சௌகர்யமாயிருந்தது.