பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/688

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

673


ஸ்வாமி தரிசனம் செய்யாமற் போவது சரியல்ல; நான் திரும்பி வருகிறவரையில் இங்கு இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லி, எங்களை அங்கேயே இருக்கச் சொல்லி, தான் விரைந்து சென்று, யாரோ டிரஸ்டிகளுடைய உத்தரவைப் பெற்று, சாவி வாங்கிக்கொண்டு வந்து, எங்களையெல்லாம் மறுபடியும் கர்ப்பக் கிரஹத்திற்கு அழைத்துக் கொண்டுபோய், கதவைத் திறக்கச் சொல்லி அருகிலிருந்து, நன்றாய்த் தரிசனம் செய்விக்கச் செய்தார். இதுவும் ரங்கநாதன் அருள் என்று கருதினவனாய், நாங்கள் எல்லாம் தரிசனம் செய்துகொண்டு திரும்பும் பொழுது, ஏதோ ஏழைப் பிராமணர் நமக்காக இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டரே என்று எண்ணினவனாய், அவர் கையில் ஒரு ரூபாயைக் கொடுக்க முயல, அவர் அதை வேண்டாம் என்று மறுத்தார்! அதன்மீது ஆச்சரியப்பட்டவனாய், “நான் கொடுப்பது குறைவாயிருக்கிறதெனத் தோன்றினால், சொல்லுங்கள் இன்னும் அதிகமாய்த் தருகிறேன்” என்று கூறி, என் பையை எடுக்க, “அப்படி அல்ல, உங்களிடம் பணத்தை ஆஸ்ரயித்து இதை நான் செய்தவனல்ல; உங்கள் நாடகங்களில் அநேகம் நான் படித்து சந்தோஷப்பட்டிருக்கிறேன். அதற்காக இதைச் செய்தேனேயொழிய வேறொன்றில்லை “ என்றார்! அதன்பேரில் நான், அப்படியிருந்த போதிலும், நீங்கள் மேற்கொண்ட சிரமத்திற்காக ஏதாவது நான் கைம்மாறு செய்ய வேண்டும் என்று வற்புறுத்த, “அப்படியாயின் எனக்குப் பணம் ஒன்றும் வேண்டாம், உங்கள் ஞாபகார்த்தமாக, உங்கள் புஸ்தகங்களிலொன்றை அனுப்புங்கள்” என்று சொன்னார். அதன்மீது அவர் வாசித்திருக்கும் நாடகங்கள் என்னென்னவென்று கேட்டறிந்து, அவர் வாசியாத, ஒன்றிற்கு இரண்டாக நாடகங்களை அவர் பெயரும் விலாசமும் கேட்டறிந்து குறிப்பிட்டுக்கொண்டு, பிறகு சென்னைக்கு வந்தவுடன் அனுப்பினேன். நான் தமிழ் நாடகத்திற்காக உழைத்தது பயன்படாமற் போகவில்லை. ஏதோ எம்பெருமான் அருளால் அதன் பலன் இந்த ஜன்மத்திலேயே எனக்குக் கொஞ்சம் கிடைத்ததே என்று, ரங்கத்திற்கு உழைத்ததற் காக, அரங்கநாதராகிய சபாபதி (மஹாவிஷ்ணுவுக்கும்