பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/693

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

678

நாடக மேடை நினைவுகள்


எப்படி நான் ஆடுவது? இது எங்கள் சபைக்கு விரோதமாமா? என்று பலவாறு கலக்கப்பட்டவனாய், என் சந்தேகங்களை யெல்லாம் எனது அத்யந்த நண்பருக்குத் தெரிவித்தேன். அதன் பேரில் அவர் “இன்னும் நீங்கள் எத்தனை வருடம் நாடக மேடையில் ஆடப் போகிறீர்கள்? நீங்கள் நாடக மேடையை விட்டு நீங்கினால் நானும் அதைவிட்டு நீங்கப் போகிறேன்; ஆகையால் என் பொருட்டாவது இதற்குச் சம்மதிக்க வேண்டும் என்று பதில் எழுதினார். இந்தக் கடைசி நியாயத்திற்குப் பதில் சொல்ல முடியாதவனாய், நான் அப்படியே ஆகட்டும் என்று சம்மதித்தேன். அதன்படி மதுரைக்குப் போய் ஆடுவதற்கு முன்பாக, எங்கள் சபையின் நிர்வாக சபையாருக்கு இதையெல்லாம் தெரிவித்து, மதுரை டிராமாடிக் கிளப்பில் நானும் எனது அத்யந்த நண்பரான நாகரத்தினம் ஐயரும் ஆட, உத்தரவைப் பெற்றே பிறகு மதுரைக்குப் போனேன். நான் இதற்கு உத்தரவைக் கேட்டபொழுது, நிர்வாக சபையார் உத்தரவைக் கொடுத்தபோதிலும், அரை மனத்துடனேயே கொடுத்தார்கள் என்பதை நான் அறிவேன். அவர்களிடம் நான் அங்கு சென்று நடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு வந்த காரணத்தை ஸ்பஷ்டமாய் ஒன்றும் ஒளியாது தெரிவித்தேன். “எனக்கோ வயதாகிறது. நான் இன்னும் சில வருடங்கள்தான் நாடக மேடையில் ஆட முடியும் நான் நாடக மேடையை விட்டு நீங்கினால், தானும் அதன் பிறகு ஆடப் போகிறதில்லை என்று நாகரத்தினம் ஐயர் சொல்லுகிறார். ஆகவே அவர் இன்னும் எத்தனை முறை ஆட முடியுமோ அதற்கு நான் உதவ வேண்டியது என் கடமையாகும்; அன்றியும் இதனால், நமது சபைக்கு ஒன்றும் கெடுதியில்லை. சென்னையில் நாங்கள் வேறு சபையில் ஆடினால் தவறாகும்; வெளியூரில் ஆடினால் அதனால் குற்றமில்லை; அன்றியும் நமது சபையார், வெளியூர்களில் போய் ஆடுகிற வழக்கத்தை விட்டுவிட்டிருக்கின்றனர். ஆகவே வெளியூர்களில் நாங்கள் ஆடுவதனால் நமது சபைக்கு நஷ்டமில்லை. மேலும் தமிழ் நாடக மேடையை முன்னுக்குக் கொண்டு வர வேண்டுமென்பது நமது சபையின் முக்கியமான கொள்கைகளில் ஒன்றல்லவா? ஆகவே, நமது சபையைப் போன்ற மற்ற சபைகளுக்கு நம்மாலானதை உதவி செய்ய