பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/696

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

681


அவருக்குப் பதிலாக ஒத்திகைகள் நடத்தினேன். முன் பின் தெரியாத புதிய ஆக்டர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதென்றால், முதலில் கொஞ்சம் சங்கோசமாயிருந்தபோதிலும், அவர்களுக்கு என்னிடமிருந்த பிரீதியானது, அதை சீக்கிரத்தில் ஒழித்து விட்டது. இரண்டொரு நாளுக்குள், என் பழைய நண்பர்களுடன் நான் குலாவுவது போல் அவர்களுடன் குலாவ ஆரம்பித்தேன். ஒத்திகைகளை யெல்லாம் முடித்த பொழுது, என் மனத்தில் திருப்தி அடைந்தபோதிலும் நாடகங்கள் எப்படியிருக்குமோ என்னும் பயம் மாத்திரம் என்னை விட்டகலவில்லை.

இவ்வருஷம் டிசம்பர் 18ஆம் தேதி இரவு 9-30 மணிக்கு மதுரை பெரிய தகரக் கொட்டகையில், “காலவ ரிஷி” என்னும் எனது நாடகம் ஆடப்பட்டது. இந்நாடகமானது, வேறொரு சபையில் நான் முதல் முதல் நடித்த நாடகமான படியாலும், இதன் பிறகு இச்சபையின் அங்கத்தினராகச் சேர்ந்து பல நாடகங்களை நான் இதுவரையில் நடித்திருக்கிற படியாலும், இந்த நாடகங்களைப் பற்றியும், இச்சபையின் ஆக்டர்களைப்பற்றியும், என் அபிப்பிராயத்தைச் சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன்.

நாடக ஆரம்பம் இரவு 9½ மணிக்கு என்று பிரசுரிக்கப் பட்டிருந்தபோதிலும், ஏறக்குறைய 9 மணிக்கெல்லாம், நாடகக் கொட்டகையில் ஏராளமான ஜனங்கள் வந்து சேர்ந்தனர். என் வழக்கப்படி நான் அவர்களை நேரிற் பார்க்காமற் போனபோதிலும், அவர்களுடைய ஆரவாரத் தால் இதை நான் உணர்ந்தேன். இந் நாடகத்தில், அர்ஜுனனாக வரும் நான், கடைசி இரண்டு காட்சிகளில்தான் ஆக்ட் செய்ய வேண்டியவனாயிருக்கிறேன். நான் மேடையின்மீது தோன்றிய பத்து அல்லது பதினைந்து நிமிஷங்களுக்கெல்லாம் நாடகமானது முற்றுப் பெறும்! ஆயினும் என் வழக்கத்தின்படி சாயங்காலம் ஐந்து மணிக்கெல்லாம் கொட்டகைக்குப் போய், வேடம் பூண்டேன். அன்று முதல் இன்று வரையில் மதுரையில் நான் இந்த கிளப்பில் நடிக்கும் பொழுதெல்லாம், எனக்கு வர்ணம் தீட்டியவர், இங்கு எனக்குப் புதிய நண்பராய் வாய்த்த பி.கிருஷ்ண சாமி சாஸ்திரியார், பி. ஏ., பி.எல்., அவர்களே. இவர் என்னைப்போல் ஏறக்குறைய வயோதிகராயிருந்த