பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/697

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

682

நாடக மேடை நினைவுகள்


போதிலும், இச்சபைக்கு இவ் வருடம் காரியதரிசியாயிருந்த போதிலும், சாயங்காலம் ஆக்டர்கள் எல்லாம் வருவதன் முன்பே கொட்டகைக்குப் போய்ச் சேர்ந்து, சுமார் 5 மணி முதல் 9 மணி வரையில் தான் ஒருவராக எல்லா ஆக்டர்களுக்கும் வண்ணம் தீட்டுவார். தன்னிலும் வயோதிகனான என்னை யௌவனமுடைய “ஆணில் அழகனான அர்ஜுனனாக”த் தோன்றும்படியாக, இவர் எடுத்துக் கொண்ட கஷ்டம் கொஞ்சமல்ல; அன்று முதல் இன்று வரை சுமார் பத்து நாடகங்களுக்கு இவ்வாறு எனக்கு மிகவும் சிரமம் எடுத்துக் கொண்டு, வண்ணம் தீட்டிய சாஸ்திரியார் அவர்களுக்கு, இதன் மூலமாக என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துவது தவிர, வேறு கைம்மாறு செய்ய வகையறியேன். எனது நண்பர் நாகரத்தினம் ஐயர் மாத்திரம், ரங்கவடிவேலுவைப்போல் தானாக வேஷம் பூணக் கற்றுக்கெண்டிருக்கின்றனர். நாற்பத்தாறு வருடங்களாகத் தமிழ் நாடக மேடையில் ஆடி வந்தும், முகத்தில் வர்ணம் தீட்டிக்கொள்ள வகையறியாது, கல் பிள்ளையாரைப்போல் உட்கார்ந்து கொண்டு, மற்றவர்கள் எனக்கு வேஷம் பூணுவதில் எல்லா வேலையையும் செய்யும்படி செய்கிறதை நினைக்கும் பொழுது, எனக்கு மிகவும் வெட்கமாய்த்தானிருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் எனக்கு இயற்கையாயுள்ள சோம்பேறித்தனம்தான் என்று நினைக்கிறேன்.

எல்லா ஆக்டர்களும் சித்தமானவுடன், மணிப்பிரகாரம் நாடகத்தை ஆரம்பிக்க வேண்டுமென்று, ஒன்பது மணிக்கெல்லாம் விநாயகர் துதி ஆரம்பிக்க வேண்டுமென்று என் புதிய நண்பர்களிடம் தெரிவித்தேன். அப்பொழுது அவர்கள் பிள்ளையார் பாட்டு என்று எங்கள் கிளப்பில் வழக்கமில்லை; ராஜராஜேஸ்வரியான அம்பிகை தோத்திரத்தைத்தான் நாங்கள் ஆரம்பப் பாட்டாக பாடுவது வழக்கம் என்று தெரிவித்தனர். அதன் பேரில் எனது நண்பர் நாகரத்தினம் ஐயரை ஒரு புறமாக வரவழைத்து, இவர்களுக்கு வழக்கமில்லாமற் போனாற் போகிறது; நமது வழக்கப்படி, பிள்ளையார் பாட்டை நமது மனத்திற்குள்ளாவது பாடிவிட்டு ஆரம்பிப்போம் என்று சொல்லி அவ்வாறே செய்தோம். இச் சபையின் அங்கத்தினனாகச்