பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/698

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

683


சேர்ந்த பிறகு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் பொறுத்துத் தான் இவர்களைப் பிள்ளையார் பாடல் ஒன்று பாடும் வழக்கத்திற்குக் கொண்டு வந்தேன்.

மேற்சொன்னபடி ஸ்தோத்திரப் பாடல்களானதும், நான் எனது நாடக ஆடையை அணிய அரங்கத்தின் பின்புறம் செல்ல, முதற் காட்சியில் நர்த்தனம் செய்ய வேண்டியிருந்த கே. நாகரத்தினம் ஐயர் என்னிடம் வந்து, இங்கு புதிதா யிருக்கிறபடியால், நான் நர்த்தனம் செய்யும் பொழுது நீங்கள் பக்கப் படுதா (Side Wing) அருகிலிருந்தால் எனக்குத் தைரியமும் உற்சாகமும் கொடுக்கும் என்று கேட்டுக் கொள்ள, அவ்வாறே அங்கு போய் உட்கார்ந்தேன். உடனே நாடக ஆரம்பத்திற்காக, மணியடித்து டிராப் படுதாவைத் தூக்கினவுடன், முதல் பாட்டைப் பாட வேண்டிய இந்திரன் வேடம் புனைந்த ஆக்டர், அபஸ்வரமாகப் பாட ஆரம்பித்தார்! இதென்னடா ஆரம்பத்திலேயே இப்படியிருக்கிறது என்று கொஞ்சம் பயமுற்றேன். “முதல் கோணல் முற்றும் கோணல்” என்னும் பழமொழி யொன்றிருப்பினும், என் விஷயத்தில் முதலில் ஏதாவது கெடுதியிருந்தால்தான் பிறகு எல்லாம் சரியாக முடிகிற தென்பதை எண்ணினவனாய், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாரம் என்று பொறுத்திருந்தேன். உடனே அக்காட்சியில் என அத்யந்த நண்பர் கே. நாகரத்தினம் ஐயர், நர்த்தனம் செய்யத் தொடங்கியது முதல், வந்திருந்த ஜனங்களெல்லாம் கரகோஷம் செய்து சந்தோஷிக்க ஆரம்பித்தனர். பிறகு சுபத்திரையாக வந்த கே.நாகரத்தினம் ஐயரும், இன்னும் மற்ற ஆக்டர்களும் மிகவும் நன்றாய் நடித்தனர் என்பது என் அபிப்பிராயம். இருந்தும் கடைசிக் காட்சிக்கு முன் காட்சியில் நான் அரங்கத்தில் பிரவேசிக்க வேண்டிய சமயம் வந்தபொழுது, என் உடலில் ஒரு விதமான பயம் தோன்றியது! “எட்டு வருஷத்து எருமைக் கடா!” என்று ஒரு பழமொழி உண்டு. அப்படிப்பட்ட கடாவின் வயது ஐந்து கொண்டதாகி, சுமார் நாற்பது வருஷம் அரங்கத்தில் ஆடிய பிறகும், நமக்கு இந்த அரங்கப் பீதியா என்று நகைத்தவனாய், மனத்தைத் தைரியம் செய்து கொண்டு, இப்படிப்பட்ட சமயங்களில் அதைப் போக்க நான் கைகண்ட ஒளஷதமாய் வைத்திருக்கும், “பிராணாயாமம்"